Hippocratic Oath: தமிழ்நாட்டில் ஹிப்போகிரட்டிக் உறுதிமொழி மட்டுமே ஏற்க வேண்டும் - மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் வெள்ளை அங்கி அணியும் விழாவில் இப்போகிரட்டிக் உறுதிமொழி ஏற்பு மட்டுமே ஏற்க வேண்டும் என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருத மொழியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து மதுரை மருத்துவக்கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், மருத்துவ கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணியும் விழாவில் ஹிப்போகிரடிக் உறுதிமொழி ஏற்புவிற்கு பதிலாக சமஸ்கிருத முறையான சரகா சபத் ஏற்கப்பட்டது. மாநிலத்தின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைக்கு விலக்காக அது அமைந்தது.
இதனால், மருத்துவ கல்லூரி டீன்கள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகள் கண்டிப்பாக மாணவர்கள் வருகையின்போது கிப்போகிரடிக் உறுதிமொழி ஏற்பை மட்டுமே கடைபிடிக்க வேண்டும். இதற்கு மாறாக ஏதேனும் நடைபெற்றால் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றிற்கு எதிராக ஆளுங்கட்சியும், இன்ன பிற பெரும்பாலான கட்சிகளும் உள்ளன. இந்த சூழலில், மதுரையில் அரசு மருத்துவ கல்லூரியில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வில் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மதுரை மருத்துவக்கல்லூரி டீன் மருத்துவர் ரத்தினவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. இன்று மதுரை மருத்துவக்கல்லூரி டீன் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மருத்துவக்கல்லூரியில் ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி எடுக்கப்பட்டது என்றும் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்