மேலும் அறிய
Advertisement
கேவலமா பாத்தவங்க இன்னைக்கு பெரும படுறாங்க.. மூலிகை நாப்கின்ஸ் தயாரிக்கும் பெண்கள்!!
சிவகங்கை தெக்கூர் கிராம பெண்கள் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வேலை செய்யும் இடம் சிறியது தான் ஆனால் அவர்களின் இலக்கு பெரியது.
'தொடர் வண்டி சத்தத்தை மிஞ்சும் அளவிற்கு தையில் மிசின் சத்தம் அதிர்ந்தது. ஒரு பக்கம் வட்டமா உட்கார்ந்து மூலிகை கலவையை பதமா சேர்த்துக்கிட்டு இருந்தாங்க. ஒரு சில பெண்கள் மட்டும் அந்த சிறிய அறைக்குள் கால்பந்து வீரர்கள் போல ஓடி, ஆடிகிட்டு இருந்தாங்க. அப்படி வேகமும் நுணுக்கமும் பிணைத்தபடி தெக்கூர் கிராம பெண்கள் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வேலை செய்யும் இடம் சிறியது தான் ஆனால் அவர்களின் இலக்கு பெரியது.
சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை அருகே உள்ளது தெக்கூர் கிராமம். இங்குள்ள பெண்கள் சுய உதவிக் குழுவாக இணைந்து 'முல்லை' என்ற பெயரில் மூலிகை நாப்கின் தயார் செய்து அசத்திவருகின்றனர். நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பெண்களை சந்திக்க அக்கிராமத்திற்கு சென்றிருந்தோம். கட்டிங், ஸ்டிச்சிங், பேஸ்டிங், பேக்கிங் என ஆளுக்கொரு வேலையை பிரித்து செய்து கொண்டிருந்தனர். வீட்டுப்பெண்கள் யூனிபார்ம் உடையில் நேர்த்தியாக வேலை செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
முல்லை நாப்கின்ஸை முன்னெடுத்து நடத்தும் தீபலெட்சுமி நம்மிடம் பேசுகையில், '' முல்லை புராடெக்ட்ஸ் எங்க அடையாளம். ஆரம்பத்துல நாப்கின் தைக்கிறத கேவலமா, அருவெறுப்பா பேசுனவுக கூட "எங்க ஊர் பெண்கள் தான் மூலிகை நாப்கின் கம்பெனி நடத்துறாகனு" பெருமையா சொல்லிக்கிறாங்க. இத தான் நாங்க மொத வெற்றியா நினைச்சோம். நா..., ஜெயலெட்சுமி, ஹேமலதா, பொன்செல்வி, பாண்டீஸ்வரி நாங்க அஞ்சு பேரும்தா ஒருங்கிணைத்து நடத்துறோம். அதோட சேர்ந்து எங்க கிராம பெண்களும் இளைஞர்களும் சப்போர்ட்டா இருக்காங்க. நான் மார்கெட்டிங் செய்யறதுக்காக திருச்சில இருக்கே. அதனால வாரவாரம் தான் ஊருக்கு வருவேன். மத்தப்படி போன்லையே எல்லாத்தையும் பேசிக்குவே. எனக்கு தெரிந்த சிலருக்கு கர்ப்பப்பை பிரச்னை இருந்துச்சு. சின்ன வயசுலையே கர்ப்பப்பைய எடுக்குற சூழ்நிலை உருவாகிடுச்சு. இந்த பிரச்னைய கண்டுபிடிக்க 5 பெண்களின் ஸ்கேன் ரிப்போர்ட்ட மருத்துவ ஆலோசனைக்கு கொண்டு போனோம். அவங்க பயன்படுத்துற பிளாஸ்டிக் நாப்கின்ஸ் முக்கிய காரணமாக இருக்கலாம்னு டாக்டர்ஸ் சொன்னாங்க.
இதனால இந்த பிரச்னைய முற்றிலுமா மாற்றனும் யோசிச்சு எங்க ஊர்ல மூலிகை நாப்கின்ஸ்ச கொண்டு போகனும் முடிவு செஞ்சேன். இத பத்தி பேசிட்டு இருக்கும் போது மூலிகை நாப்கின்ஸ் பயிற்சி குறித்து விளம்பரம் பார்த்தேன். பாரதிதாசன் யுனிவர்சிட்டி மூலம் கிடைச்ச ரெண்டு நாள் பயிற்சி வகுப்ப பயன்படுத்தி மூலிகை நாப்கின்ஸ் செய்றத கத்துகிட்டேன். அடுத்தகட்டமா எங்க கிராம பெண்கள் 2 பேர கரூரை சேர்ந்த வள்ளி என்பவரிடம் பயிற்சிக்கு கூட்டிட்டு போனேன். அங்க முழுமையா மூலிகை நாப்கின் தயார் செய்ய தெரிஞ்சுக்கிட்டு 2018 நவம்பர் 4-ம் தேதி எங்க கிராமத்தில நாப்கின்ஸ் செய்ய ஆரம்பிச்சுட்டோம்.
எல்லார்டையும் பொருளாதாரம் இல்லாத சூழலலில் முதல்ல இணைஞ்ச நாலுபேரு மட்டும் தலா 50 ஆயிரம் இன்வெஸ்ட்மெண்ட்ல தொழில் துவங்கினோம். பெரிய லாபம் எடுக்கனும்னு நோக்கத்தோட முல்லைய துவங்கல. சமூக நோக்கத்த தான் இப்பையும் முன்னிலை படுத்துறோம்.
பயிற்சியில் நாங்க கத்துக்கிட்டத விட 95% மாறுதலா புதுமையான விசயங்கள நாப்கின்ஸ்ல சேர்த்துட்டோம். நாப்கின்ஸ்ல கூடுதல் தையல் போடுவதால் சுருங்காம இருக்கும், பக்க வாட்டுலையே விங்ஸ், இப்படி ஏகப்பட்ட சேஞ் கொண்டு வந்தோம். அதனால விற்பனை வாய்ப்புல தொய்வு ஏற்படல. சாம்பில் பீஸ் பயன்படுத்த ஒவ்வொருத்தரும் தொடர்ந்து எங்க புராடெக்ஸ்ட்ச யூஸ் பண்றாங்க. கஸ்டமர் பீட்பேக் ஏத்தாப்ல நாப்கின்ஸ் மாத்துனோம். இப்ப 9 சைஸ் வரைக்கும் நாப்கின்ஸ் செய்றோம். பேஸ்புக், வாட்சப், ஊரக புத்தாக்க திட்டம் மூலமா விற்பனை வாய்ப்பு கூடி இருக்கு. கொரோனா காலகட்டம் தான் கொஞ்சம் தொய்வ ஏற்படுத்தி இருக்கு. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விற்பனை கண்காட்சி நடைபெறும். அதுல அதிகளவு வாடிக்கையாளர்கள பிடிச்சோம். அவங்க முல்லை நாப்கின்ஸ் பயப்படுத்திட்டு தொடர்ந்து வாங்கிட்டு இருக்காங்க. இப்படி ஏகப்பட்ட இடத்துல ஸ்டால் மூலம் விழிப்புணர்வும் பிளஸ் விற்பனையும் செஞ்சுகிட்டு இருந்தோம். கொரோனா அப்பரம் இதுமாதிரி விசயம் சவால இருந்துக்கு. இருந்தாலும் கொரியர் மூலமாக பல இடங்களுக்கு கொண்டு போய்கிட்டு இருக்கோம்.
நிறைய பெண்கள் முல்லை நாப்கின் பயன்படுத்திட்டு கை கொடுத்துட்டு நன்றி சொல்லிட்டு போறாங்க. கடையில் விற்கும் பிளாஸ்டிக் நாப்கின்ஸ்சவிட எங்களுடைய நாப்கின்ஸ் விலை அதிகம் தான். ஆனா ஒவ்வொரு நாப்கின்ஸ்சையும் மெனக்கிட்டு ஆரோக்கியம் தான் முக்கியம்னு நினைச்சு தான் பண்றோம். வேம்பு, சோத்துகத்தாளை, மஞ்சள், துளசி உள்ளிட்ட 9 வகையான மூலிகைய பயன்படுத்துறோம்.
சென்னை, அசாம் ஏன் யூ.எஸ் வரைக்கும் ஆர்டர் எடுக்க முடியுது. கொரோனா காலகட்டத்தில் மாதம் 500 பாக்கெட் மட்டும் தான் கொடுக்க முடிஞ்சது. இப்ப அந்த பிரச்னைகளும் சரியாகிட்டு இருக்கு. ஒரு பாக்கெட்டுக்கு 7 பீஸ் இருக்கும். அதனால தேவையான போது எங்கட்ட கொரியர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். எங்களுடைய வெப்சைட் மூலமும் நிறைய ஆர்டர் எடுத்துக்கிட்டு இருக்கோம்.
ஈரோட்டை சேர்ந்த மருத்துவர் கீதா தனது பேஸ்புக் பக்கத்தில் எங்களுடைய முல்லை பேட்ஸ் பத்தி எழுதி இருந்தாங்க. ஒரு மருத்துவர் எங்களுடைய பேட்ஸ்க்கு ரிவ்யு கொடுத்தது கூடுதல் பலமா அமைஞ்சது. அதன் மூலம் அவரின் நண்பர்களும் முல்லை பேட்ஸ சஜஸ்ட் பண்றாங்க. அதே போல முல்லை பேட்ஸ் பள்ளிக் குழந்தைகள கவர்ந்துருக்குனு தான் சொல்லனும். முல்லை பேட்ஸ் யூஸ் பன்றதால வயித்து வலி கூட இல்லேனு பீட் பேக் சொல்லிருக்காங்க. ஒரு பாக்கெட் 80 ரூபாய் இருந்து சைக்கு ஏத்தாப்ல விலை வச்சுருக்கோம். வெள்ளைபடுதலுக்கு சிறப்பு பேடும் செய்றோம். ஒவ்வொரு பேடும் ஹைஜீனிக். அதனால் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் எங்களை பாராட்டி ரூ. 1லட்சத்தி50 ஆயிரம் பணம் வழங்கியுள்ளது. இதனால் மானாமதுரை பிளாக்கில் சிறந்த குழுவாக பாராட்டப்பட்டுள்ளோம். எங்களுடைய பணியை தொடர்ந்து கண்காணித்த அதிகாரிகள் கொரோனா ஊக்கத் தொகையா இந்த பணம் வழங்கியுள்ளனர்.
முல்லையில் வேலை செய்யும் பெண்களின் வருவாய் சிறிது, சிறிதா கூட்டணும். அதே சமயம் எப்போதும் நல்ல புராடெக்ட்ஸ் தான் குடுப்போம். எங்களிடம் நிறைய பேர் பயிற்சி கேட்டு வர்ராங்க. ஆனா யாருக்கும் இப்பதைக்கு ஓ.கே சொல்லலே. அவங்க இத ஒரு சுயதொழிலா மட்டும் பார்க்க கூடாது. சமூகத்தின் முக்கிய மாற்றமா பாக்கனும். அப்பதான் இதில் அவங்க நேர்மையா செய்வாங்க. எங்களுடைய அடுத்த, அடுத்த வெற்றிக்கு பின் பயிற்சி வகுப்பாவும் மாறலாம். கொரோனா சமயத்தில் அதிகமாக ஸ்டால் போடமுடியவில்லை என்றாலும் கொரோனாவிற்கு பின் ஆர்கானிக் சார்ந்த விசயங்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகமானோர் மூலிகை நாப்கின்ஸ் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்”. என்றார்.
நாப்கின்ஸ் தயாரிப்பில் இருந்த பாண்டீஸ்வரி..., " ஆரம்பத்துல கேளி செஞ்சவங்க கூட எங்கள பெருமையா பாக்குறாங்க. அதனால ஒவ்வொரு பேடையும் நல்லதா வெளிய கொண்டுவர்றோம்.சொந்த ஊர்ல எங்களால வேலை செய்றது ரெம்ப ஈசியா இருக்கு. வீட்டு வேலைய கவனுச்சுக்கிட்டு இங்கை வேலை பாக்குறது மன அழுத்தம் இல்லாம இருக்கு" என்றார்.
தெக்கூர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பெண்கள் குழு இணைந்து கடந்த சில வருடங்களாக ஆகச்சிறந்த சமூகப் பணிகளை செய்துவருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் 98% ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தங்களது கிராமத்தில் தடுக்கும் விதமாகக் களப்பணி ஆற்றி சமூக ஆர்வலர்களின் பாராட்டுக்களை பெற்றனர். மரக்கன்றுகள் நடுவது, குடிநீர் வசதி அளிப்பது, இலவச தொழில் பயிற்சி கொடுப்பது, இலவச மருத்துவ முகாம், பிளாஸ்டிக் ஒழிப்பு, கஜா நிவாரணப் பணி, கண்மாய் தூர்வாருவது என பல சமுதாயப் பணிகளை செய்துவருகின்றனர். இதனால் மானாமதுரை ஒன்றியத்தில் சிறந்த நற்பணி மன்ற என்ற விருதை ஏற்கனவே பெற்றுள்ளனர் கிராமத்தினர். கொரோனா காலகட்டத்தில் ஊர் முழுக்க கிருமி நாசிகள் தெளிப்பது, மைக்செட் மூலம் கொரோனா பற்றி விளக்கியது, இலவசமாக முககவசம், நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்குவது என சொந்த முயற்சியால் பல விசயங்கள் முன்னெடுத்து முன்மாதிரி கிராமமாக விளங்குகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் பாராட்டும் பெற்று ஊக்கத்தொகை பெற்றுள்ளது பாராட்டுக்குறியது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -பழுப்புக் கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி.. மதுரையில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்ச்சி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion