பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது
’’தங்கக் கவசம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதையடுத்து நவம்பர் 1-ஆம் தேதி தங்கக் கவசம் களையப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கி பெட்டகத்துக்கு கொண்டு செல்லப்படும்’’
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். இவர் தனது வாழ்நாளில் அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து செயல்பட்டு வந்தார். கடைசி வரையிலும் பிரமச்சாரி வாழ்க்கையையே வாழ்ந்தார். பசும்பொன்னில், தனது வீட்டில் உள்ள பூஜை அறையி்ல் தினசரி தேவர் நீண்ட நேரம் தியானத்திலும், பூஜையி்ல் ஈடுப்பட்டவர். சிறந்த ஆன்மிகவாதியும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஒவ்வொரு வருடமும், அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட மண்டபம் வளாகத்தில் நடைபெறுகிறது. தேவரின் பிறந்த தேதியும், இறந்த தேதியும் அக்டோபர் 30 ஆகும். எனவே ஆண்டு தோறும் அக்டோபர் 30 ஆம் தேவரின் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவரின் ஆன்மீக வாழ்க்கையை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் தேவர் நினைவாலயத்தில் கொண்டாடாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழாவும், 59 ஆவது குரு பூஜையையும் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் 4.50 கோடி மதிப்பில் 13.5 கிலோ எடையில் தேவர் சிலைக்கு வழங்கப்பட்ட தங்கக் கவசம் நேற்று மதுரை பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை பெட்டகத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் பசும்பொன்னுக்கு எடுத்து வரப்பட்டது. முன்னதாக மதுரை வங்கிக் கிளையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் ஆகியோர் வங்கியில் கையெழுத்திட்டு தேவர் தங்கக் கவசத்தை பெற்றனர். அப்போது முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.மணிகண்டன், எம்எல்ஏக்கள் ஐயப்பன் (உசிலம்பட்டி), பெரியபுள்ளான் என்ற செல்வம் (மேலூர்) உள்ளிட்ட அதிமுகவினர் உடனிருந்தனர். நேற்று மதியம் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், தேவர் நினைவிடப் பொறுப்பாளர்கள் காந்தி மீனாள் நடராஜன், தங்கவேலு, பழனி, அழகு ராஜா ஆகியோர் முன்னிலையில் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். இதையடுத்து தேவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தங்கக் கவசம் அணிவிக்கப்பட்ட தேவர் சிலைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கக் கவசம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதையடுத்து நவம்பர் 1-ஆம் தேதி தங்கக் கவசம் களையப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கி பெட்டகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அண்ணாநகர் கிளையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.
பசும்பொன்னில் தங்கக் கவசத்தை அணிவிக்க வந்த முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் 2014ஆம் ஆண்டு தங்கக் கவசம் வைக்கப்பட்டதாகவும் இது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்று கூறினார். பின்னர் செய்தியாளர்கள் சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சூழ்நிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு நான் ஒரு தொண்டன் எனக்கு தெரியாது என்று கேள்விக்கு பதிலளிக்க மறுத்து சென்றுவிட்டார்.