மதுரைக்கு குடிநீர் எடுத்து செல்வதை எதிர்ப்பு தெரிவித்து தேனியில் விவசாயிகள் போராட்டம்
’’மதுரைக்கு தினசரி 11 கோடி லிட்டர் தண்ணீர் அனுப்பட்டு வரும் நிலையில் குடிநீர் பற்றாக்குறை 24 கோடி லிட்டராக உள்ளது’’
மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தேனி மாவட்டம் தமிழக, கேரள எல்லையை இணைக்கும் பகுதியான லோயர்கேம்பில் இருந்து முல்லை பெரியாறு அணை மூலம் வைகை அணைக்கு தினந்தோறும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்னிலையில் முல்லை பெரியாறு அணையின் லோயர்கேம்ப் பகுதியிலிருந்து 125 MLD குடிநீரை குழாய் மூலம் மதுரைக்கு எடுத்து சென்று விநியோகிக்கும் கூட்டு குடிநீர் திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அப்போதே தேனி மாவட்டத்தில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வைகை அணையில் இருந்து தினந்தோரும் வினாடிக்கு 47 கன அடி விதம் நாள் ஒன்றுக்கு 11 கோடியே 50 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மதுரை மக்களின் மக்கள் தொகை 17 லட்சத்திற்கு மேல் இருப்பதால் நாள் ஒன்றின் குடிநீர் தேவை 24 கோடி லிட்டராக உள்ளது. பற்றாக்குறையை சரி செய்வதற்காக லோயர்கேம்ப் மின் நிலையம் பகுதிக்கு மேல் 140 அடி உயரத்திற்கு தடுப்பனை கட்டி நீர் தேக்கி வைத்து ராட்சத குழாய்கள் மூலம் மீதம் இருக்கும் 12 கோடியே 5 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அப்படி எடுக்கப்படும் தண்ணீரால் தேனி மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் கூறி விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் முல்லை பெரியாறில் லோயர்கேம்ப் முதல் குழாய் வழியில் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நஞ்சை, புஞ்சை மேடான பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு சென்று திராட்சை, வாழை உள்ளிட்ட தோட்ட பயிர்கள் சாகுபடி செய்வதற்கு 1975ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கலைஞர் அனுமதி அளித்தது, அரசாணை வெளியிட்டதை பின்பற்றி தண்ணீர் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்துவதை கைவிட வேண்டும், வைகை அணையை தூர்வாரி வைகையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தி தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து தன் சொந்த நிலங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து இறவை பாசனம் மூலம் மேடானப் பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு சென்று திராட்சை, வாழை உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்ய 1975ல் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அனுமதி கொடுத்து அரசாணை வழங்கினார்கள். அதனை பின்பற்றி கொண்டு செயல்பாட்டில் உள்ள திட்டத்தை ரத்து செய்ய தற்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நடவடிக்கை எடுப்பது கலைஞர் மீதான அவமதிப்பு செயலாகும் அதனை உணர்ந்து கைவிட வேண்டும் எனவும் கூறினர்.
மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் திட்டம் கொண்டு செல்ல முல்லைப் பெரியாறு பாசன ஆற்றில் தடுப்பணை கட்டி குழாய் வழியாக கொண்டு செல்வதை கைவிட்டு, வைகை ஆற்றை தூர்வாரி தண்ணீரின் கொள்ளளவை அதிகப்படுத்தி அதன் மூலம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு 152 அடி கொள்ளளவை முழுமை உயர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் தொடர்ந்து பாசன பிரச்சனைகளில் சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் அரசாணைகள் இல்லாமலும் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே தமிழக முதலமைச்சர் விவசாயிகளுடைய கருத்தை கேட்டு உரிய பாசன வழிகாட்டு நெறிமுறைகளை கொள்கைத் திட்டங்களை வகுக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற