தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் ஆறு மாதங்களில் ஆறு காவலர்கள் கொலை - இபிஎஸ்
தனது கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மாநிலத்தின் முதல்வரிடம் பேசி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை - இபிஎஸ்
ஐந்து மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கும் இந்த "முல்லைப்பெரியாறு" பிரச்சனையை தீர்க்காத முதல்வர் ஸ்டாலின் எப்போதும் தனது குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்க கூடியவர் என தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் இரண்டாம் கட்ட பிரச்சார பயணமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டி பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர் தூவியும், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தும் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் திறந்தவெளியில் நின்று பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டத்தின் நீராதாரமான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக அதிமுக போராடி உயர்த்திய நிலையில், தற்போது வரை அதன் உயரத்தை 152 அடியாக உயர்த்த ஆளும் திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் தங்களை இந்தியா கூட்டணி என்று கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலின் எதற்காக தனது கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மாநிலத்தின் முதல்வரிடம் பேசி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதிலிருந்தே தெரிகிறது திமுகவின் ஸ்டாலின் குடும்பத்திற்கு ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்காகத்தான் இந்தியா கூட்டணியில் அவர்கள் இருக்கிறார்கள், ஐந்து மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கும் இந்த முல்லைப்பெரியாறு பிரச்சனையை தீர்க்காத முதல்வர் ஸ்டாலின் எப்போதும் தனது குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்க கூடியவர் என்றும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் 152 அடியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் இன்று ஊழல் இருக்கிறது என்றும் கலெக்சன் , கமிஷன், கரெக்சன் இது மூன்றும் இந்த ஆட்சியில் தாராளமாக இருக்கிறது.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் லஞ்சம் கொடுக்காமல் தற்போது நடக்காது என்றும் பேசிய அவர்போதை பொருட்களால் தமிழகத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதால் இந்த போதைப்பொருள் விற்பனையை காவல்துறையும் தடுக்க முடியவில்லை என்றும் இதற்கு முன்பாக இருந்த டிஜிபி 2.0, 3.0 என்று ஓவை மட்டும் போட்டுவிட்டு ரிட்டயர்டு ஆகிவிட்டார் என்றும் கடைசிவரை ஓ போட்டதுதான் மிச்சம் என்றும் பேசிய அவர் இன்று தமிழகத்தில் சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்றும் நாட்டை ராணுவம் காப்பது போல தமிழகத்தை காக்கும் காவல்துறைக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் 6 மாதத்தில் 6 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறையின் கைகள் இன்று திமுக அரசால் கட்டப்பட்டுள்ளது என்றும் பேசிய அவர் இந்த ஆட்சி தேவையா என மக்களிடம் கேள்வி எழுப்பியதோடு இதற்கு முடிவு கட்டும் தேர்தல் 2026 தேர்தல்” என்று பேசினார்.





















