Arikomban: போக்கு காட்டி வந்த அரிகொம்பன் - யானையை வனத்துறை பிடித்தது எப்படி..?
யானையின் துதிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு சிகிச்சை அளித்த பின்பு வனப்பகுதிக்குள் விடப்படுமா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம், எரசக்கநாயக்கனூர் ,சின்ன ஓவுலாபுரம், ராயப்பன்பட்டி சண்முகாநதி அணை அடர்த்த காப்புக்காடு வனப்பகுதியில், அரிகொம்பன் யானை கடந்த 7 நாட்களாக அடர்ந்த வனத்தில் முகாமிட்டது. அரிகொம்பனை பிடிக்க வந்த மூன்று கும்கி யானைகள், கம்பம் வனத்துறை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், தயார்நிலையில் இருந்தது. அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக இருந்த அரிகொம்பன் யானை இதன் நடமாட்டம் ரேடியோ காலர் மூலம் வனத்துறை குழுவினரால் தனியாக கண்காணிக்கப்பட்டது. அதேநேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்த அரிகொம்பனை மயக்க ஊசி போட்டு, பிடிப்பதற்கும், மீண்டும் ஊருக்குள் வரவிடாமல் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, இதன் நடவடிக்கைகளை வனத்தறை, தீவிரமாக கண்காணித்தது. ஸ்ரீவில்லிபுத்துார்- மேகமலை வன உயிரின காப்பக அதிகாரிகள் குழுவினர் கண்காணிப்புடன் கிருஷ்ணகிரி, ஓசூர், நீலகிரி- முதுமலை, கோவை, தேனி யானை வல்லுநர் குழுவினர் தொடர்ந்து இதன் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் சின்ன ஓவுலாபுரம் பெருமாள்மலை வனப்பகுதியில் நள்ளிரவு சுற்றியதை ரேடியோ காலர் மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர். இதனை அடுத்து முழு அலார்ட் விடப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த் தலைமையில் வனத்துறையினர் விரைந்தனர். சின்ன ஓவுலாபுரம், புத்தம்பட்டி, எரசை , ஆணைமலையன்பட்டி செல்லும் சாலைகள் அனைத்தும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அந்த பகுதியில் செல்ல பொதுமக்கள் டூவீலர், கார்கள் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு இன்று அதிகாலை 12 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மது குமாரி தலைமையில். 100 -க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். முக்கிய காரணங்கள் தவிர மற்ற அனைவரையும் சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர் சாலைகளில் செல்வதற்கு தடை விதித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து அரிகொம்பன் யானை சின்ன ஓவுலாபுரம் அடர்ந்த காட்டில் இருந்து சமவெளிகாட்டுப்பகுதிக்கு வந்ததை யானைகள் கண்காணிப்பு வழித்தட குழுவினர் உறுதி செய்தனர். மயக்க ஊசி செலுத்தினாலும், எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கிறதா என கண்காணிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. இதன் பின்பு இதனை அடுத்து கால்நடை மருத்துவர் டாக்டர் பிரகாஷ் தலைமையிலான 5 மயக்கவியல் டாக்டர்கள், அரிசி கொம்பன் யானையை நெருங்கி மயக்க ஊசியை செலுத்தினர். தொடர்ந்து அதிகாலை 3 மணி முதல் 3:30 மணிக்குள் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதனை அடுத்து கம்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த கும்கி யானைகளான உதயா, சுயம்பு, சக்தி, உள்ளிட்ட மூன்று காட்டு யானைகள் கொண்டுவரப்பட்டது இதனை அடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதன் பின்பு அரிகொம்பன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
மயக்க ஊசி செலுத்திய பிறகு இதன் செயல்பாடுகள் எப்படி உள்ளது இது ஆக்டிவ்வாக உள்ளதா என கண்காணிக்கப்பட்டது. ஆனால் அரிசி கொம்பன் மயங்கிய நிலையில் இருந்ததால். வனத்துறையினர் மிகவும் உத்வேகத்துடன் அது நின்ற இடத்திற்கு அருகில் சென்றனர். குறிப்பாக மயக்க ஊசி செலுத்திய 30 நிமிடத்தில் யானையின் செயல்பாடு முழுவீச்சில் முடங்கியது. யானை தட வல்லுனர் குழுவினர் மிகத் தைரியமாகவும், இதே போல் யானைகளைப் பற்றி நன்கு அறிந்த பழங்குடியின பளியர்கள் குழுவினர் மிகத் தைரியமாகவும் அரிசி கொம்பன் அருகில் சென்றனர். இதன் பின்பு அரிகொம்பனை பிடித்து லாரியில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியது. 3 கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது.பின்னர் பிடிக்கப்பட்ட அரிகொம்பனை வனத்துறையின் பிரத்தியோக வாகனத்தில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் சின்ன ஓவுலாபுரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக தேனி நகர் பகுதியில் கடந்து அழைத்துச் செல்கின்றனர். அரிக்கொம்பன் யானையை வாகனத்தில் அழைத்துச் செல்லும் வரும் தகவலை அறிந்து ஏராளமான பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று தங்களது கைபேசியில் புகைப்படம் எடுத்தனர்.
மேலும் பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யானையை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதிகளில் விடப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.ஆனால் அரிக்கொம்பனை எந்தப் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று வனத்துறை சார்பில் இன்னும் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படாமலே உள்ளது. மேலும், யானையின் துதிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு சிகிச்சை அளித்த பின்பு வனப்பகுதிக்குள் விடப்படுமா என்று கேள்வியும் எழுந்துள்ளது.