பாண்டியர்களின் போர்க்களமா திண்டுக்கல்; குடகனாறு சொல்லும் வரலாறு!
”குடகனாறு சொல்லும் வரலாறு’ பாண்டியர்களின் போர்க்களமாக இருந்ததா திண்டுக்கல். 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தடுப்பணை.
திண்டுக்கல் அணைப்பட்டி அருகே குடகனாறு உள்ளது. அதற்கு முன்பாக சிறிது தூரத்தில் அமைந்துள்ளது இந்த தடுப்பணை. சோழனுக்கு கல்லணை போல பாண்டியர் பெயரை இந்த தடுப்பணை சொல்லும் என்று கூறப்படுகிறது. 800 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது இங்குள்ள தடுப்பணை. இந்த தடுப்பணையை கட்டுவதற்கு யானைகளை பயன்படுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு கல்லும் 12 மீட்டர் நீளம் ,3 அடி உயரம், 2 அடி அகலத்தில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு பின்பும் இந்த கற்கள் தற்போதும் தனது கம்பீரத்தை உறுதிப்படுத்துகின்றன. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள அய்யனார் சிலை 12ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் கூறுப்படுகிறது. தற்போது கன்னிமார் சிலை போன்றவற்றை ஏற்படுத்தி வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பனையில் உள்ள அய்யனாருக்கு மடை திறப்பு அய்யனார் என்ற பெயரும் உண்டு .குடவன் எனும் அசுரன் சிவனிடம் ஆசி பெற்று குடகனாக மாறி மக்களுக்கு சேவை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதனை அபிதான சிந்தாமணி எனும் இலக்கியத்தில் குடவன் பெயர் இருப்பதன் மூலம் அறிய முடிகிறது. இந்த தடுப்பணைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாகவே ஆங்கில ’யு’ வடிவில் சிறிய தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
வேகமாக வரும் ஆற்று நீர் அணையை பெயர்த்து விடக்கூடாது என்ற முன் யோசனையுடன் இந்த தடுப்பணை அமைந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள குடிமராமத்து பணியை அப்போதே கையில் எடுத்து செயல்படுத்தி காட்டியிருக்கின்றனர் பாண்டியர்கள். இந்த தடுப்பணையை நிறுவி அதனை பராமரிப்பதற்கான அணைப்பட்டி எனும் கிராமம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றோரம் இருந்த கிராமத்திற்கு அப்போதுதான் அணைப்பட்டி என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது . இதில் வரும் வருமானத்தை கொண்டு அணையை பராமரித்து உள்ளனர் அன்றைய கால மக்கள். இந்தப் பகுதியில் உள்ள நடுகல், பள்ளிப்படை என்பது வீரமாக போரிட்டு உயிர் நீத்த மாவீரனுக்கு நிறுவப்படுவது. முன்னோர்களின் கல் எழுத்துக்கள் கலை சிற்பங்கள் போர் வீரர்களின் நினைவுகளை சுமந்து நிற்கிறது.
அணைப்பட்டியில் உள்ள நடுகல் இவ்வூர் பாண்டியர் காலத்து ஊர் என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது. குளம் தொட்டு வளம் பெருக்கிய பாண்டியர்கள். குடகனாறு பாசன நீர் வழி குளம், தாமரை குளம். இக்குளத்தின் மதகு வாய்க்கால் வழியில் ஊரின் மேற்கு கரையில் பாண்டிய நாட்டு வீரன் ஒருவன் நடுவில் 5 அடி உயரத்துடன் உள்ளது. வீரனின் இடதுகை கேடயத்தை ஏந்தியவாறும் வலது கையில் வாளை தலைக்குமேல் தூக்கியபடியும் கால்கள் போர்க்களத்தில் துள்ளிக் குதிப்பது போலவும் உள்ளது. வீரனின் தலையில் கொண்டை மேல் நோக்கி உள்ளது.வாள் தூக்கிய விதம் போரில் வீர மரணத்தை குறிக்கிறது. இந்நடுகல்லிற்கு மேற்கே சிறிது தூரத்தில் இடிந்த கோயில் உள்ளது. இதன் அமைப்பும் ஒரு புறமும் ஒரு பள்ளிப் படைக் கோயில் ஆக உள்ளது. போரிட்டு வீரமரணம் அடைந்த சிற்றரசன் பேரரசனுக்கு அமைப்பது பள்ளிப்படை கோவில். அந்த அமைப்பை ஒத்திருக்கிறது இந்த பள்ளிப்படை. அதில் சிற்பங்கள் ஏதும் இல்லை.
இவ்வூர் பாண்டியருக்கு பக்கபலமாக வீரர்களை அனுப்பிய ஊர் என்று இதன் நினைவு சின்னங்கள் எடுத்துக்காட்டுகிறது. பள்ளிப்படை முகப்பு இடிந்த நிலையில் முகப்பு கல்லிள் இரு யானையும் நடுவில் நின்றவாறு மகாலட்சுமி உருவமும் பொறிக்கப் பட்டுள்ளது பள்ளிப்படையை குறிக்கும் குறியீட்டு கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இதில் தாமரை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தாமரைக்குளம் அருகே போர் நடந்ததை குறிப்பிடுகிறது. இதுகுறித்து வரலாறு ஆய்வாளர் சிலரிடம் பேசியபோது, வரலாறுகளை ஒப்பிட்டு பார்த்ததில் தாங்கள் ஆய்வு செய்ததில் இவை பாண்டியர் காலத்தைச் சார்ந்தது என்பதை தெளிவாக அறிய முடியும் என்கின்றனர். பாண்டியர்கள் ஆட்சி செய்ததற்கு இப்பகுதியை போர்க்களமாக பயன்படுத்தியதற்கு சான்றுகள் எச்சங்களாக இங்கு உள்ளன . இதனை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதும் இப்பகுதியில் கோரிக்கையாக உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகள் நடுகல் போன்ற வரலாற்று எடுத்துக்காட்டாக உள்ள இடங்களை பாதுகாக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.