திண்டுக்கல்லில் மழை பெய்ய வேண்டி 6 கிராம மக்கள் இணைந்து நடத்திய சிறப்பு பூஜை
’’பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் அப்பகுதியில் மழை பெய்யும் என நம்பப்படுகிறது. அப்படி இந்த கோவிலில் பூஜை நடத்திய ஒரு வாரத்திற்குள் மழையும் பெய்துள்ளதாகவும் கூறுகின்றனர்’’
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மழை பெய்யாமல் இருந்து வருகிறது. இப்பகுதியில் செய்யப்படும் பெரும்பாலான விவசாயங்கள் பருவ மழையை நம்பியே உள்ளது. குறுகிய கால பயிர்களான சின்னவெங்காயம், தக்காளி, முருங்கை போன்ற விவசாயங்கள் மட்டுமே செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஓராண்டுக்கும் மேலாக பருவ மழையின்மை விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இருப்பு இல்லாத நிலையே தொடர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கால நிலை மாற்றத்தால் இப்பகுதியில் கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் தெரிகிறது. விவசாய நிலங்களும் வானம் பார்க்கும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஒட்டன் சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயங்களுக்கு பயன்படும் பரப்பலாறு அணையிலும் நீர் வரத்தும், நீர் இருப்பும் இல்லாத நிலையே தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள இராகவநாயக்கன் பட்டி பகுதியில் உள்ள செல்லப்ப மலை அடிவாரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சாத்தாரப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக கொண்டுவருகின்றனர். இக்கோவிலில் மழை வேண்டி நடத்தப்படும் பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் அப்பகுதியில் மழை பெய்யும் என நம்பப்படுகிறது. அப்படி இந்த கோவிலில் பூஜை நடத்திய ஒரு வாரத்திற்குள் மழையும் பெய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் மழை பெய்ய வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கியும் வழிபாடு நடத்தப்பட்டது. இந்த பூஜையில் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 6 ஊர் கிராம மக்கள் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்து மழை பெய்ய வேண்டி வழிபாடு செய்தனர்.
தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!