திண்டுக்கல் சிறுமலையில் சந்தன மரம் வெட்டியது தொடர்பாக ஒருவர் கைது - 70 கிலோ சந்தன கட்டை பறிமுதல்
அவரிடம் இருந்து சுத்தமான 11 கிலோ சந்தன கட்டைகள் மற்றும் சுத்தம் செய்யப்படாத 60 கிலோ சந்தன கட்டைகள் என மொத்தம் 71 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலையில் புறம்போக்கு நிலத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சந்தன மரம் வெட்டியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், 70 கிலோ சந்தன கட்டை, நாட்டு துப்பாக்கி, ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தென்மலை பகுதியில் வன பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணுகுட்டி பாறை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சந்தன மரங்களை வெட்டி பதுக்கி வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கவராயப்பட்டியை சேர்ந்த செல்வம்(39) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து சுத்தமான 11 கிலோ சந்தன கட்டைகள் மற்றும் சுத்தம் செய்யப்படாத 60 கிலோ சந்தன கட்டைகள் என மொத்தம் 71 கிலோ சந்தன கட்டைகள், நாட்டுத் துப்பாக்கி ஒன்று, ஏர்கன் ஒன்று ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செல்வத்துடன் சேர்ந்து மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட சிறுமலை தென்மலை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் வனத்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார். தப்பி ஓடிய ராஜேந்திரனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளின் மதிப்பு ஒரு லட்சமாகும் கைது செய்யப்பட்ட செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் வழக்கில் தீர்ப்பு
பழனியை அடுத்த கோரிக்கடவை சேர்ந்தவர் முருகவேல் (32). கூலித்தொழிலாளி. கடந்த ஆண்டு (2021) இவர், 17 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பழனி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் முருகவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி வழக்கை நடத்தி வந்தார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட முருகவேலுக்கு சிறுமியை கடத்தியதற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
https://www.dailythanthi.com/News/State/15-years-imprisonment-for-worker-854523