திண்டுக்கல்: மாணவியை கடத்தி பாலியல் வழக்கில் சிக்கியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
திண்டுக்கல் அருகே வெவ்வேறு பகுதியில் நடந்த பாலியல் புகார் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள துமிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (34). கூலித்தொழிலாளி. கடந்த 2020-ம் ஆண்டு இவர், 14 வயது பள்ளி மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் உறவினர்கள் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இடையக்கோட்டை காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி விசாரணை நடத்தினார். பின்னர் முருகேசன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
வழக்கை, நீதிபதி சரண் விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதாடினார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு இந்திய தண்டனை சட்டம் 363-ன் கீழ் மாணவியை கடத்திய குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை அடுத்த கீழக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 57). கூலித்தொழிலாளி. கடந்த 2021-ம் ஆண்டு இவர், வீடு புகுந்து 13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் முருகன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கு விசாரணையை நீதிபதி சரண் நடத்தி வந்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு இந்திய தண்டனை சட்டம் 451-ன் கீழ் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் மற்றும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் சிறை, ரூ.8 ஆயிரம் அபராதம் என மொத்தம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்