சுற்றுலா இடங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்; 13 கடைகள் சேதம் - கொடைக்கானலில் பொதுமக்கள் அச்சம்
கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. 13 கடைகளை யானைகள் சூறையாடின. இதனால் வியாபாரிகள் கதறி அழுதனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி, மதிகெட்டான்சோலை, மோயர் பாயிண்ட், பில்லர்ராக், குணாகுகை, பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு ஆர்வத்துடன் சென்று, அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டுகளிப்பது வழக்கம். இந்தநிலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு கடந்த வாரம் குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் உலா வந்தன. அவை கடந்த 10 நாட்களாகவே அங்கேயே முகாமிட்டிருந்தன. யானைகள் நடமாட்டம் எதிரொலியாக பேரிஜம் ஏரி மற்றும் அதன் அருகில் உள்ள மதிகெட்டான் சோலை, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
பேரிஜம் ஏரிக்கு செல்லும் பகுதியில், மற்றொரு சுற்றுலா இடமான மோயர் பாயிண்ட் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் கடைகள் அமைத்து, உணவுப்பொருட்கள், அலங்கார பொருட்கள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரிகள் தங்களது கடைகளை தார்ப்பாய்கள் மற்றும் தகர கதவுகளால் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்தநிலையில் பேரிஜம் ஏரியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் நள்ளிரவில் அங்கிருந்து நகர்ந்து மோயர் பாயிண்ட் பகுதிக்கு வந்தன. அப்போது அங்கு வரிசையாக அமைக்கப்பட்டிருந்த 13 கடைகளை சேதப்படுத்தி சூறையாடின. அங்கிருந்து பொருட்களை தூக்கி வீசின. உணவுப்பொருட்களை ருசியும் பார்த்தன. விடிய, விடிய அங்கேயே முகாமிட்டிருந்த காட்டு யானைகள் நேற்று அதிகாலை அங்கிருந்து பைன்மரக்காடு பகுதிக்கு சென்றன.
இதற்கிடையே மோயர் பாயிண்ட் பகுதியில் கடைகள் அமைத்துள்ள வியாபாரிகள் நேற்று காலை 8 மணி அளவில் வழக்கம்போல் கடைகளை திறக்க வந்துள்ளனர். அப்போது கடைகள், காட்டு யானைகளால் சூறையாடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக கொடைக்கானலை சேர்ந்தவர்களின் 7 பேருடைய கடைகளில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகி கிடந்தன. இதனால் அவர்கள் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கவலை அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா, வனச்சரகர் செந்தில் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் சேதமடைந்த கடைகளை பார்வையிட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிதாக கடைகள் அமைத்துத்தரப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதற்கிடையே வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது காட்டு யானைகள், கொடைக்கானல் பகுதியின் முக்கிய சுற்றுலா இடமான பைன்மரக்காடு பகுதியில் இடம் பெயர்ந்து அங்கு முகாமிட்டிருந்தன.
இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறை ஊழியர்களை கண்டதும் அங்கிருந்து காட்டு யானைகள், அவர்களை விரட்டின. இதனால் வனத்துறை ஊழியர்கள் அங்கிருந்து திரும்பினர். இருப்பினும் காட்டு யானைகளை கண்காணித்து வருவதுடன், அவற்றை விரட்டுவதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா இடங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து கடைகளை சூறையாடிய சம்பவம், கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.