பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டு சிறை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.
திண்டுக்கல் அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரத்தை சேர்ந்தவர் தனுஷ்குமார் வயது 20. கல்லூரி மாணவர். கடந்த 2022-ம் ஆண்டு இவர், 16 வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் தனுஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி கருணாநிதி இந்த வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து நீதிபதி கருணாநிதி நேற்று தீர்ப்பளித்தார்.
அதில் குற்றம்சாட்டப்பட்ட தனுஷ்குமாருக்கு இந்திய தண்டனை சட்டம் 450-ன் கீழ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதமும், இந்திய தண்டனை சட்டம் 506-ன் கீழ் மிரட்டல் 6 மாதம் சிறை தண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.