Dindigul: விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து!
மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த சாதம், 200 கிடா கறி..! விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு.. 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோயில் திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி விருந்து விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டி புதூர் வடகாட்டான் கருப்புசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடந்து வருகிறது. இக்கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே பெண்கள் வர கட்டுப்பாடு கடைப்பிடித்து வரப்படுகிறது. இந்த கறி விருந்து திருவிழாவில் பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டிகள் வரையில் பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. இக்கோவிலில் இருந்து விபூதி முதல் பூஜை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எந்த பொருளையும் கோவில் எல்லையைத் தாண்டி கொண்டு செல்ல அனுமதி இல்லை.
விழாவில் தமிழகத்தில் பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஆடுகள், அரிசி, காய்கறி உள்ளிட்டவற்றை நேர்த்திக் கடனாக கோயிலுக்கு வழங்கப்படும். மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழா இவ்வாண்டு மே 28 செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடர்ந்து வடக்காட்டான் கருப்புசாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது . நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 300 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது.
Election Results 2024 LIVE: மோடிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு - மல்லிகார்ஜுன கார்கே
இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று நடந்த கறி விருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் நத்தம் ,செந்துறை,சாணார்பட்டி, குட்டுபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரம் பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவிலில் செய்யப்படும் ஆட்டுக்கறி மற்றும் சாதம் மீதமானால் அப்பகுதியிலே குழி தோண்டி புதைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.