Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
அரையாண்டு விடுமுறை முடிந்து, ஜனவரி 2-ம் தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

தமிழக பள்ளிகளுக்கு 9 நாட்கள் மட்டுமே அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்று தகவல் பரவிய நிலையில், இந்தத் தகவலை பள்ளிக் கல்வித்துறை மறுத்துள்ளது.
டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு
தமிழகத்தில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி அன்று தொடங்கியது. டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடக்கிறது.
அதேபோல 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று (டிசம்பர் 15ஆம் தேதி) முதல் அரையாண்டுத் தேர்வு தொடங்கியது. இவர்களுக்கும் 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன.
9 நாட்கள் விடுமுறை?
இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டதாக, அதாவது டிசம்பர் 24-ம் தேதி முதல், 2026 ஜனவரி 1-ம் தேதி வரை, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததாகத் தகவல் வெளியானது. அதேபோல அரையாண்டு விடுமுறை முடிந்து, ஜனவரி 2-ம் தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
எனினும் பள்ளி நாட்காட்டியில் புத்தாண்டு, வார விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில், முன்கூட்டியே பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. மழை காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. எனினும் இந்தத் தகவலை பள்ளிக் கல்வித்துறை மறுத்துள்ளது.
12 நாட்கள் விடுமுறை
பள்ளி ஆண்டு நாட்காட்டியில் ஏற்கெனவே கூறியபடி அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.






















