Palani Temple : ’பழநி முருகன் கோயிலில் ஆகம விதி மீறல்?’ மீண்டும் குடமுழுக்கு நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்..!
பழநி முருகன் கோயிலில் ஆகம விதியை மீறி மூலவர் இருக்கும் கருவறைக்குள் சிலர் சென்று வந்ததால், கோயிலுக்கு மீண்டும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை
பழநி மலைக்கோவில் குடமுழுக்கு நடப்பதற்கு முன்பாகவே மூலவர் சிலை அமைந்துள்ள கருவறைக்குள் சிலர் சென்ற விவகாரம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலவர் சன்னதிக்குள் நுழைந்தது குறித்து கருவறை முன்பு பக்தர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைராலகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் குடமுழுக்கு கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்துவரும் நிலையில் குடமுழுக்கு நடப்பதற்கு முந்தைய நாளான ஜனவரி 26ம் தேதி அன்று மாலை மூலவர் சிலை அமைந்துள்ள கருவறைக்குள் சிலர் சென்ற சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பழநிமலை முருகன் கோவில் குடமுழுக்கு குறித்த தேதி அறிவிக்கப்பட்டவுடன், பழநி கோவிலில் அமைந்துள்ள நவபாஷாண சிலையை பாதுகாக்கும் வகையில், ஓய்வு பெற்ற நீதியரசர் பொங்கிலியப்பன் தலைமையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை சிரவை ஆதினம், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், இந்து சமய அறநிலையத்துறை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, பழனி கோயில் குருக்கள் கும்பேஸ்வரர், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி.செந்தில்குமார், பழனி நகர்மன்றத்தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவானது பழனி கோயில் கருவறை மற்றும் மூலஸ்தானத்தில் செய்யவேண்டிய பணிகள் மற்றும் நவபாஷாண முருகனின் திருமேனியை பாதுகாக்கும் வகையில் உள்ள பணிகள் பற்றியும், ஆகம விதிகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குடமுழுக்கு தொடர்பாக சிலை பாதுகாப்பு குழுவினர் பலமுறை மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர். இதைத்தொடர்ந்து குடமுழுக்கு பணிகள் நிறைவடைந்து. இந்நிலையில் குடமுழுக்கு நடப்பதற்கு முந்தைய நாளான கடந்த 26ம்தேதி வியாழக்கிழமை இரவு சிலை பாதுகாப்பு கமிட்டியை சேராத சிலர் கோவில் கருவறைக்குள் சென்று வந்ததாக கூறி பக்தர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பழநி கோயில் கருவறை நுழையும் வாசற்படியில் அமைச்சர் சேகர்பாபு சட்டை அணியாமல் நிற்பதும், உள்ளே குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சிலர் நிற்பது தெரிகிறது. தொடர்ந்து மற்றொரு வீடியோவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் சிலர் வெளியே வருவதும் தெரிகிறது. இதையடுத்து கருவறைக்குள் சிலர் சென்றதாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி பாலதண்டாயுதபாணி பக்தர் பேரவை தலைவர் செந்தில்குமார் மற்றும் சில உள்ளூர் பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை ஏற்படுத்தினர்.
மேலும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்வதும், தொடர்ந்து நீங்கள் செய்வது தவறு என்றும், இதுவரை பழநி கோயில் வரலாற்றில் நடக்காத சம்பவங்கள் அனைத்தையும் ஆகமவிதியை மீறி செய்கிறீர்கள் என்றும், இதை பழநியாண்டவன் பொறுத்துக்கொள்ள மாட்டான் எனவும் ஆவேசமாக கத்தி கோஷமிடும் வீடியோ வைரலாகியுள்ளது. தொடர்ந்து கருவறை முன்பு நீதிபதிகளை எதற்கு அழைத்து வந்துள்ளீர்கள், முருகன் என்ன காட்சிப்பொருளா? என்றும், அவர்களுடன் வந்த பழநி கோயில் அர்ச்சகர் ஒருவரிடம் வாக்குவாதம் செய்து சாபம் விடுவதுமாக முடிகிறது அந்த வீடியோ. பழநி கோயில்குடமுழுக்கு நடப்பதற்கு முன்பு கருவறைக்குள் ஆகம விதிகளை மீறி பலரும் நுழைந்ததாக வரும் தகவல்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாலதண்டாயுதபாணி சுவாமி பக்தர் பேரவையின் தலைவர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ’பழநி கோவில் மூலஸ்தானத்திற்கு நடைபெறும் பணிகள் குறித்து அறிந்துகொள்வதற்காக குடமுழுக்கிற்கு முந்தைய நாள் பழநி வந்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிலை பாதுகாப்பு குழுவை சேர்ந்த சிலர் கருவறை முன்புள்ள அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்தனர்.
குடமுழுக்கு பணிகளுக்காக கருவறை மூலவர் சிலை ஆவாகனம் செய்தால் கருவறை மூடப்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் சிலையை பார்க்கக்கூடாது என்பது ஆகமவிதி. இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்கு முதல்நாள் அரசியல் அதிகாரம் மிக்கவர்கள் பழனி கோவில் கருவறைக்குள் நுழைந்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். கடந்த 23ம்தேதி மாலை முதல் குடமுழுக்கு முடிந்த பிறகே மூலவரை, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என்று திருக்கோவில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், பழனி கோவில் கருவறைக்குள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், அறங்காவலர்கள், கோவில் இணைஆணையர் நடராஜன் மற்றும் அவர்களது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் உட்பட சுமார்400க்கும் மேற்பட்டவர்கள் கருவறைக்குள் நுழைந்தனர். இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தனது மனைவியையும் உள்ளே அழைத்து சென்றுள்ளார். அவருடன் மேலும் சில பெண்கள் கருவறைக்குள் நுழைந்துள்ளனர்.
இது மாபெரும் ஆகமக்குற்றம் என்றும், ஆகமம் குறித்து நன்கு அறிந்த குருமார்கள், ஆதினங்கள், குருக்கள் ஆகியோர் இதை சரி என்று சொல்ல முடியுமா? பழனி கோவில் கருவறையில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மட்டுமே ஸ்வர்ண பந்தனம் செய்யவேண்டும் என்பது ஆகமவிதி., மற்ற கோவில்களை போல் பழனி கோவில் அல்ல என்றும்,பழனி கோவில் வரலாற்றில் இதுபோன்ற ஆகமக்குற்றங்கள் இதுவரை நடந்தது இல்லை என்றும், பழனி கோவிலின் வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும். பழனி ஆண்டவன் நெருப்பு என்றும், பழனி கோவில் குடமுழுக்கு என்பது மற்ற கோவில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கும்பாபிஷேகத்திற்காக பாலாலாயம் செய்யப்பட்டு ஆவாஹனம் செய்தாலும், பழனி முருகனுக்கு காலபூஜை நடக்கும். இதுபோல மற்ற கோவில்களில் பூஜைகள் நடக்காது. இது 31அர்ச்சகர்கள் மற்றும் 64அயன்மிராசு பண்டாரங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் என்றும், எனவே 23ம்தேதி முதல் 27ம்தேதி வரை ஆவாகனம் செய்யப்பட்டிருந்த போதும் கருவறை மட்டுமே மூடப்பட்டிருந்தது. ஆனால் காலபூஜை தடங்கலின்றி நடைபெற்றது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர், பழனி கோவில் கருவறைக்குள் வெப்ப அளவு அறியும் வெப்பமானி கருவியை கொண்டு சென்று வெப்ப அளவு குறித்து ஆய்வு செய்துள்ளார். ஆராய்ச்சி செய்யும் இடமா பழனி கோவில் கருவறை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார், அதோடு, அவர் கெண்டுசென்ற வெப்பமானி கருவி செயல்படாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார். பழனி கோவிலில் சிறுசிறு தவறகழைக்கும் துப்புரவு பணியாளர்கள் முதல் காவலாளிகள் வரை அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தன்னை அப்பழுக்கற்ற அதிகாரி போல் காட்டிக்கொள்ளும் இணை ஆணையர் நடராஜன், தற்போது அவர்செய்துள்ள இந்த மாபெரும் தவறுக்கு தார்மீக பொறுப்பேற்று தனது பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார். மேலும் அந்த கும்பாபிஷேகத்தை காண அங்கு வந்திருந்த வெளியூரை சேர்ந்த நீதிபதிகள் மற்றும் பலரும் முருகனை பார்ப்பதற்காக இணை ஆணையர் நடராஜன, முருகனை மறைத்து கட்டியிருந்த திரைச்சீலையை விலக்கி அனைவரும் பார்க்கும்படி பெரிய குற்றத்திலும் ஈடுபட்டுள்ளார். இவை அனைத்திற்கும் முழுப்பொறுப்பு ஏற்கவேண்டியது பழனி அர்ச்சக ஸ்தானிக சங்கத்தை சேர்ந்த அர்ச்சகர்கள் தான் என்றும், இந்த தவறை அவர்கள் வெளியே சொல்லவேண்டும் என்றும், இது தொடர்பான அத்தனையும் வீடியோவுடன் ஆதாரமாக உள்ளது என்றும், 2004ம் ஆண்டு பழனியாண்டவர் கருவறைக்குள் நுழைந்த காஞ்சி ஜெயேந்திரர் சரஸ்வதி சாமிகளுக்கும், 2006ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு யாரோ காட்டிய தவறான வழிமுறையால் பழனி ஆண்டவனிடம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார். என்றும் தெரிவித்தார்.
மேலும், இவர்கள் இருவருக்கும் பழனியாண்டவன் தக்க பாடம் புகட்டினான். இதை யாரும் மறந்துவிடமுடியாது. அதேபோல் இப்போதும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் செய்யப்பட்டு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இவர்களுக்கும் சரியான, தக்க பதிலடி கிடைக்கும் என்றும், பழனியாண்டவனின் தீர்ப்பு இறுதியானது, உறுதியானது. இவர்கள் அனைவருக்கும் தக்க தண்டனை கொடுப்பான் என்றும், பழனி முருகனை தொட்டு அனுதினமும் பூஜை செய்து வழிபடும் கோவில் தலைமை குருக்கள் முதல் முக்கிய அர்ச்சகர்கள் வரை அனைவரும் கருவறைக்குள் இருக்கும்போதே ஆகமவிதிகளை மீறி அவர்களை கருவறைக்குள் உள்ளே அனுமதித்தது ஏன்? இதற்கு அர்ச்சகர்கள் தலைவர் கும்பேஷ்வரர் குருக்கள் உள்ளிட்ட அனைவரும் தன்னிலை விளக்கம் கொடுக்கவேண்டும் என்றும், இந்த தவறை வெளியே சொல்லாமல், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மிரட்டலுக்கு பயந்து, மௌனம் காத்து தவறை மூடி மறைப்பது பழனியாண்டவருக்கு செய்யும் துரோகம் என்றும், எனவே அவர்கள் அனைவரும் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.