’நீதிபதி சரமாரி கேள்வி’ ஆஜகராகவில்லையெனில் அவ்வளவுதான் - கலெக்டருக்கு எச்சரிக்கை..!
திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் குவாரி தொடர்பான வழக்கில், அம்மாவட்ட கலெக்டருக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி ஆற்று மணல் மற்றும் கிராவல் மணல் அகழ்வு நடைபெறும் விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படுவதில் அதிகாரிகளின் பங்கு குறித்து நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
மணல் குவாரி சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் மணல் மற்றும் கருங்கற்கள் தோண்டுதல் நடைபெற்று, தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளி கொண்டு செல்லப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் குறைந்து, அரசு பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல் வைக்க உத்தரவு
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சட்டவிரோத மணல் குவாரிகள் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் குவாரி நடத்தியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கனிம வளம் நமது நாட்டின் சொத்து, அதை திருட அனுமதிக்க கூடாது என கடுமையாக எச்சரிக்கை வழங்கினர்.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜராகிய அரசு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட குவாரிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத குவாரி நடத்தியவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று விளக்கம் அளித்தார். ஆனால் மனுதாரர் தரப்பில் வாதம் நடத்திய வழக்கறிஞர், முன்பக்கம் மட்டுமே சீல் வைக்கப்பட்டு, பின்பக்கம் வழியாக மணல் அள்ளப்படுகிறது என புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.
நீதிபதி சரமாரி கேள்வி
அப்போது, இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கின்றனவா? அல்லது வேறு விதமாக நடக்கின்றனவா? அதிகாரிகளின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த குற்றச்சாட்டுகள் கடுமையானவை. அத்துடன், மாவட்ட நிர்வாகம் முழுமையாக நிலைமையை விளக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி முழு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி, உண்மையை விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை எதிர்த்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றன. அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமா? சட்டவிரோத குவாரிகள் மூடி சீல் வைக்கப்பட்டு நிறுத்தப்படுமா? என்பதைக் காலம் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் பல பகுதிகளில் இதுபோன்று சட்டவிரோத குவாரிகள் செயல்படுகின்றன. அவற்றை அரசு அதிகாரிகள் கையூட்டு பெற்று கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். குறிப்பாக தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவு குவாரிகள் செயல்படுகின்றன.





















