பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தகாத வார்த்தைகளால் அநாகரிமாக திட்டியதாகவும் புகார்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் அரசு நடுநிலைப்பள்ளியில் 100க்கு உட்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 3 ஆம் வகுப்பு ஆசிரியராக கடந்த 8 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருபவர் அகமது ரபி (56). இவர் அந்த பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தகாத வார்த்தைகளால் அநாகரிமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்
இது போன்ற செயல்களில் பல முறை ஆசிரியர் அகமது ரபி ஈடுபட்டதாக புகார் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறிய நிலையில் மாணவிகளின் பெற்றோர் தரப்பில் சென்று வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஆசிரியர் அகமது ரபியை அழைத்து விசாரணை செய்தனர் கல்வித்துறை அதிகாரிகள். இந்த நிலையில் ஆசிரியர் மீது தொடர் பாலியல் தொல்லை ரீதியான புகார் எழுந்து வந்த நிலையில் ஆசிரியர் அகமது ரபியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டனர்.
அதன் பின்னர் பெற்றோர்கள் கொடுத்த புகாரை சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு காவல் துறையிடம் விசாரணை செய்ய பரிந்துரைத்ததன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை செய்ததில் நடந்த சம்பவம் உண்மை என தெரிய வந்தது. இதன் அடிப்படையில் ஆசிரியர் அகமது ரபி மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவி மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்தது குறித்த விசாரணையில் எந்தவித ஒரு தகவலும் கிடைக்காத நிலையிலும் தேனி, கோயம்பத்தூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை புகார்கள் பதிவாகி வருவதும் பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை, கொலை சம்பவங்களும் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் இது போன்ற பாலியல் தொல்லை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் கோரிக்கை எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.





















