திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என புகழ்ந்து அழைக்கப்படுவது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று மாலை சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக தங்கப்பல்லக்கில் அழகர்மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்பாடாகினார்.
மதுரையை நோக்கி புறப்பட்ட கள்ளழகர்
பின்னர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக வந்த கள்ளழகர் இன்று அதிகாலையில் மதுரை மாநகர் பகுதியான மூன்றுமாவடி பகுதிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு பிரமாண்டமாக எதிர்சேவை நடைபெற்றது. எதிர்சேவையின்போது பக்தர்கள் கருப்பசாமி வேடமிட்டு ஆடல்பாடல்களுடன் வரவேற்றனர்.
பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடி கள்ளழகரை வரவேற்றனர். மேலும் கள்ளழகர் முன்பாக பல்வேறு இசை வாத்தியங்கள் முழுங்கவும், கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடியும் கருப்பசாமி வேடமி்ட்ட பக்தர்கள், அனுமர் வேடமிட்டும் கள்ளழர் எதிர்சேவையின் போது வருகைதருவார்கள். மாநகர் பகுதிக்குள் நுழைந்த கள்ளழகரை மனம் குளிர்வித்து வரவேற்கும் வகையில் தோல் பைகளால் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்று வருகின்றனர்.
வடகரையில் குவிந்த பக்தர்கள்
நேற்று வரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா என்பதால் வைகையாற்றை கடந்த தெற்கு பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வந்த நிலையில் இன்று முதல் வடகரை பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கினர். சித்திரை திருவிழா சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் நிகழ்வாக ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகிறது.
பொதுவாக எதிர்சேவையின் போது . மூன்றுமாவடியில் இருந்து புறப்பாடாகிய கள்ளழகர் சர்வேயர் காலனி, புதூர், டி.ஆர்.ஓ.காலனி, உள்ளிட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி மாலை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருவார். அழகர்கோயில் புறப்பாடு முதல் மீண்டும் கோயிலுக்கு திரும்பும் வரை சுமார் 480 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். இதனை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதியில் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு திருவிழா நெருக்கடியில் இருவர் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சிசிடிவி கேமிராக்கள் அமைத்தும் பாதுகாப்பு பணிகளை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இரவு தல்லாகுளம் அம்பலகார மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர் நள்ளிரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். பின்னர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்று ஆயிரம்பொன் சப்பரத்தில் காட்சியளிப்பார். அதனை தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி நாளை அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் வெள்ளி குதிரை வாகனத்தில் வீர ராகவ பெருமாள் வரவேற்க கள்ளழகர் வைகையாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருளவுள்ளார். இதை தொடர்ந்து நாளை ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும், 7 ஆம் தேதி நாளை மறுநாள் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து தசாவதாரம், பூப்பல்லக்கு, மலைக்கு திரும்புதல் போன்ற நிகழ்வுடன் கள்ளழகர் சித்திரை திருவிழா வரும் 10-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. கள்ளழகர் எதிர்சேவையின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திகோஷங்கள் எழுப்பியபடி தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி கள்ளழகரை வரவேற்பு அளிப்பார்கள்.