மதுரை : மாற்றுத்திறனாளி பாட்டியை பார்சல்போல கட்டிப்போட்டு செயினைப் பறித்த பேத்தி கைது!
மாற்றுத்திறனாளி மூதாட்டியை பார்சல்போல கட்டிப்போட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட சொந்த பேத்தி கைது செய்யப்பட்டார்.

கொரோனா காலகட்டம் பலருக்கும் தலைவலியாக உள்ளது. ஆனால் இந்த கொரோனா ஊரடங்கை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி இரண்டு மடங்கு லாபம் வைத்து விற்பது, குட்கா - பான்மசாலா போன்ற பொருட்களை கூடுதல் விலைக்கு கொடுப்பது, என தங்களுக்கு தெரிந்த டெக்னிக்கை பயன்படுத்தி தவறான வழியில் சம்பாதிக்கின்றனர்.

இதில் சிலர் கோமாளித்தனமாக செய்யும் சேட்டையால் காவல்துறையிடம் வாண்டடாக மாட்டிவருகின்றனர். இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி அடுத்த மேக்கிலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். இந்த மூதாட்டி மாற்றுத்திறனாளி என்பது கூடுதல் சோகம். இந்நிலையில் இந்த மூதாட்டியிடம் ”கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக வந்துள்ளதாக” தெரிவித்த இளம்பெண் ஒருவர் நலம் விசாரித்துள்ளார். ”உங்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் எதுவும் இருக்கா? உங்கள் வீட்டில் யார்,யார் இருக்கா?ஆதார் கார்டு நம்பரக்குடுங்க என்று நம்பும்விதமாக பேசியுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த இளம்பெண், வீட்டிற்குள் புகுந்த மூதாட்டியை பார்சல்போல கட்டிவைத்துவிட்டு, பின்னர். 11 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பட்டப்பகலில் அரங்கேறிய இந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து தகவலறிந்து, விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக உசிலம்பட்டி முழுவது காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் 11 சவரன் நகையை அடகுவைத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையின் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது மூதாட்டியிடம் திருடிய நகையைத்தான் அந்த கடையில் அடகு வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் நகை கிடைத்த பின்னர்தான் காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நகையை திருடிய அந்த பெண், அந்த மூதாட்டியின் சொந்த பேத்தி ’உமாதேவி’ என்பது தெரியவந்துள்ளது. இது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து காவல்துறையினர்,"கொரோனா ஊரடங்கின் போது வருமானமின்றி தவித்து வந்த உமாதேவி தனது பாட்டியிடம் பணம் கேட்டதற்கு தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் நாடகமாடி, பாட்டியை கட்டிப்போட்டு செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அந்த பெண் விசாரணையில் தெரிவித்தார். மேலும் அவர் முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உடைகள் அணிந்திருந்தால் பாட்டிக்கு அடையாளம் தெரியவில்லை. உமாதேவியை கைது செய்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -‛அனுமதியிருந்தும் கடலுக்கு போக முடியல...’ கலங்கும் மீனவர்கள்! .





















