விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி
ஏற்கனவே இரண்டு அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளதால் இதற்கு அனுமதி வழங்குவது காவல்துறைக்கு சிரமத்தையே ஏற்படுத்தும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த மணிகண்ட பிரபு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்து தமிழர் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவராக இருக்கிறேன். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வேடசந்தூர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்க திட்டமிட்டுள்ளோம். 31 ஆம் தேதி விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து செப்டம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று வேடசந்தூர் காலணி வழியாக கடைவீதி, பேருந்து நிலையம், போலீஸ் லைன் வழியாக அடைக்கனுர் குடகனாற்றுப் பகுதியில் சிலையை கரைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதற்கு அனுமதி கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் தற்போது வரை எவ்விதமான முடிவும் வழங்கப்படவில்லை. ஆகவே, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் தொடர்ச்சியாக செப்டம்பர் 1, 2ஆம் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." எனக் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஏற்கனவே மனுதாரர் கோரும் இடத்தில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மனுதாரர் குறிப்பிடும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் அல்ல என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளதால் இதற்கு அனுமதி வழங்குவது காவல்துறைக்கு சிரமத்தியே ஏற்படுத்தும் எனக்கு கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்