விமான நிலையத்தில் சிக்கிய பிரிட்டிஷ் போர் விமானம்: 22 நாட்களுக்குப் பின் நடந்த பரபரப்பு நகர்வு! F35B சிக்கல் தீருமா?
F-35B போர் விமானத்தின் கோளாறை இந்தியாவிலேயே சரி செய்ய முடியுமா என்று நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கோளாறு காரணமாக 22 நாட்களாக நிறுத்தி வைக்கப்படிருந்த பிரிட்டீஷ் கடற்படை போர் விமானம், நிபுணர்கள் ஆய்வுக்குப் பிறகு நகர்த்தப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் விமானப்படை மற்றும் கடற்படை பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றுள்ள தருணத்தில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய போர் விமானங்கள் நாடுகளின் ராணுவ வலிமையை தீர்மானிக்கின்றன. அத்தகைய ஒரு சிறந்த போர் விமானம் தான் F-35B Lightning II. இது ஒரு 5ம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம், மற்றும் குறுகிய தூர புறப்பாடு மற்றும் நெடுக்குத்தன்மை கொண்ட தரையிறக்கம் (STOVL – Short Takeoff and Vertical Landing) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. F-35B விமானம் அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது F-35 Joint Strike Fighter (JSF) திட்டத்தின் ஒரு பகுதி. F-35 இற்குள் மூன்று மாடல்கள் உள்ளன. F-35B மாடல் குறிப்பாக US Marine Corps, UK Royal Navy, மற்றும் Italian Navy ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகிறது.
அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் பிரிட்டன் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அதில் இருந்து புறப்பட்ட F-35B போர் விமானம், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, இந்திய விமானப்படையின் உதவியுடன் கடந்த 14ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு எரிபொருள் நிரப்பினாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பறக்க முடியவில்லை. புறப்படுவதற்கு முன்பு செய்யப்பட்ட சோதனைகளின் போது, ஹைட்ராலிக் சிஸ்டம் பழுதடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.640 கோடி மதிப்புள்ள போர் விமானம், கடந்த மூன்று வாரங்களாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை சரி செய்ய பிரிட்டிஷ் கடற்படை பொறியாளர்கள் முயன்றாலும் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து 25 நிபுணர்கள் கொண்ட குழு அட்லஸ் இசட்.எம்.417 ரக விமானத்தில் திருவனந்தபுரம் விமானநிலையம் வந்தனர். இந்தக் குழுவினர் போர் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தனர்.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏர் இந்தியா விமானங்கள் நிறுத்தும் பகுதிக்கு நகர்த்தி வைக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பிரிட்டீஷ் கடற்படை மறுப்பு தெரிவித்தது. தற்போது, அதற்கு ஒப்புக் கொண்டதால், 22 நாட்களுக்குப் பிறகு, F-35B போர் விமானம், பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டது. F-35B போர் விமானத்தின் கோளாறை இந்தியாவிலேயே சரி செய்ய முடியுமா என்று நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. அப்படி முடியாவிட்டால், F-35B போர் விமானத்தை பகுதி பகுதியாக பிரித்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.





















