அம்பேத்கர், பெரியாரை படிக்க வேண்டும் என விஜய் சொன்ன கருத்தை வரவேற்கிறேன் - பாஜக ஸ்ரீனிவாசன்
நான் சொன்னால் மாணவர்கள் கேட்க மாட்டார்கள். விஜய் சொன்னால் கேட்பார்கள் - பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன்
மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில்,”தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவுகிறது. திமுகவின் பொறுப்பற்ற செயல்களை பாஜக கண்டிக்கிறோம். கலைஞரிடம் மத்திய அரசுக்கு எதிரான போக்குகள் இருந்தது. பலமுறை திமுக அரசை மத்திய அரசு கலைத்துள்ளது. மத்திய அரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலைக்க விரும்பவில்லை. திமுக அரசை கலைத்த போதெல்லாம் அதற்கு எதிராக குரல் கொடுத்தது பாஜக தான். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி சூழல் தமிழகத்தில் இருப்பது நல்லதல்ல. தொடர்ந்து மத்திய அரசோடு, ஆளுநரோடு மோதல் போக்கோடு திமுக நடந்து கொண்டுள்ளனர். அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது திமுக அரசு.
செந்தில்பாலாஜி தவறு செய்யாவிட்டால் ஏன் பயப்பட வேண்டும், தவறு செய்யாத ஒருத்தர் மீது ரெய்டு வந்தால் திமுக ஏன் பயப்பட வேண்டும். தொடர்ந்து சிபிஐ அமலாக்கத்துறை மீது முரண்பாடு மோதல் போக்கை பின்பற்றி வருகின்றனர். முகநூல் பதிவுக்கெல்லாம் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் சிறைக்கு அனுப்புகின்றனர். சிறைச்சாலை எங்களுக்கு புதிதல்ல. இந்தியாவில் 61 வருடம் பாஜக எதிர்க்கட்சியாக இருந்துள்ளோம். எதிர்க்கட்சி அரசியல் பற்றி பாஜகவுக்கு தெரியும். எல்லா வழக்குகளையும் சட்டரீதியாக சந்திப்போம். 2 பேரை சிறையில் போடுவதால் எங்கள் மன உறுதியை சிதைக்க முடியாது. திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது. பிரதமர் மோடி மீது அவதூறு பதிவை போட்டால் காவல்நிலையத்தில் சிஎஸ்ஆர் வாங்கவே படாதபாடு பட வேண்டி உள்ளது. ஆனால் முதல்வர் மீது அவதூறு பதிவு தெரியாமல் போட்டுவிட்டால் கூட உடனடியாக கைது செய்து விடுவார்கள். எனக்கும் முதல்வர் அய்யா ஸ்டாலின் தான். முதல்வர்களை மதிப்பவர்கள் பாஜகவினர். ஆனால் உங்களுக்கும் பிரதமர் மோடி தான். பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும். கேட்டு கேட்டு தமிழகத்திற்கு எல்லவற்றையும் தமிழக அரசு அதிகமாக பெற வேண்டும்.
காசி செளராஷ்டிரா தமிழ்ச்சங்கம் நடத்தினாலும் திமுக புறக்கணிக்கிறது. தமிழர் செங்கோலை வைக்கும் போது புறக்கணிக்கிறார். பாஜக எதிரி என திமுக நிழல் யுத்தம் நடத்துகிறார்கள். டீம் இந்தியா என பிரதமர் சொல்வதில் நமது முதல்வரும் உள்ளார் என்று கூறினார்.
அண்ணா பெரியாரை மாணவர்கள் படிக்க வேண்டும் என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, அம்பேத்கர், பெரியாரை படியுங்கள் என நடிகர் விஜய் சொன்ன கருத்தை வரவேற்கிறேன். ஈவேராவை முழுமையாக மாணவர்கள் படிக்க வேண்டும். அப்போது தான் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பெரியார் பேசியது, இடஒதுக்கீடு, தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து பெரியார் பேசிய கருத்துக்களை மாணவர்கள் முழுமையாக படிக்க வேண்டும். அப்போது தான் அவர் குறித்து மாணவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். நான் சொன்னால் மாணவர்கள் கேட்க மாட்டார்கள். விஜய் சொன்னால் கேட்பார்கள் எனப் பேசினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்