Avaniyapuram Jallikattu: முடிந்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... 24 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு !
மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது.
தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் காலை 7.30 மணிக்கு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்பின் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இதனையடுத்து இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 300மாடுபிடி வீரர்களும் 7சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டதோடு 624 காளைகளும் அவிழ்க்கப்பட்டது.
விதவிதமான பெயர்களில் அவிழ்க்கப்பட்ட காளைகள் வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றது. இதேபோன்று மிரட்டிய காளைகளையும் மாடுபிடி வீரர்கள் அடக்கி பல்வேறு பரிசுகளை பெற்று சென்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் போட்டியின்போது காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் பார்வையாளர்கள் உற்சாகபடுத்தினர்.
போட்டியின் போது திறம்பட விளையாடி 24 காளைகளை அடக்கிய மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி முதல் பரிசாக காரும், 19 காளைகளை அடக்கி மதுரை வலையங்குளம் பகுதியை சேர்ந்த முருகனுக்கு இரண்டாவது பரிசாக இரு சக்கர வாகனமும், 12 காளைகளை அடக்கிய மதுரை விளாங்குடியை சேர்ந்த பரத்குமார் என்ற மாடுபிடி வீரர் 3வது பரிசாக பசுங்கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோல் களத்தில் வீரர்களுக்கு சவால்விடுத்து களத்தில் நின்று விளையாடிய மணப்பாறை தேவசகாயம் என்பவரது காளை முதல் பரிசாக இரு சக்கர வாகனமும், மதுரை அவனியாபுரம் ராமு என்பவரது காளை இரண்டாவது பரிசாக பசுங்கன்றையும், மதுரை அவனியாபுரம் பிரதீஷ் என்பவரது காளை மூன்றாவது பரிசாக சைக்கிளும் பரிசாக பெற்றது.
போட்டியின் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதலமைச்சர் சார்பில் கார் ஒன்றும், சிறந்த காளைக்கு திமுக திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனமும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியின்போது ஆயிரக்கணக்கான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா-2022:
அவிழ்த்து விடப்பட்ட மொத்த காளைகள் எண்ணிக்கை: 652
பங்கேற்ற வீரர்கள் எண்ணிக்கை: 294
போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. காலை 7.30மணிக்கு தொடங்கிய போட்டியானது மாலை 5மணி வரை நடைபெற்றது.போட்டியின் முடிவில் சிறந்த 3 மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகோப்பைகள் வழங்கப்பட்டன.
மேலும் படிக்க: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு! 65 பேர் காயம்!