Theni: அரசு மருத்துவமனை ஊழியர் மரணம்! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் - நடந்தது என்ன?
உயிரிழந்தவர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறை முன்பாக உடலை வாங்க மறுத்து காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு..
பெரியகுளம் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் இறப்பில் மர்மம் எனக்கூறி உறவினர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறை முன்பாக உடலை வாங்க மறுத்து காத்திருப்பு போராட்டம்.
வேலைக்கு சென்றவர் உயிரிழப்பு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி என்பவரது மகன் 28 வயது ராம்கி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மோனிஷா என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது ஆறு மாதத்தில் அனன்யா என்ற பெண்குழந்தை உள்ளது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் அறுவை சிகிச்சை அரங்கில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக உதவியாளராக பணியாற்றி வரும் ராம்கி தினமும் தனது ஊரிலிருந்து புறப்பட்டு பணிக்கு சென்று வந்தார்.
ADMK: அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் யாருக்கு? யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
உயிரிழந்த சோகம்:
இந்நிலையில் நேற்று காலை பணிக்கு சென்ற ராம்கி பிற்பகலில் உடல்நல குறைவால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அலறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு குடும்பத்தினர், காலையில் ஆரோக்கியமான நிலையில் வேலைக்கு சென்ற ராம்கி சுயநினைவு இல்லாமல் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ராம்கி சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.
இறப்பில் சந்தேகம்:
இந்நிலையில் இன்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடிய ராம்கி மற்றும் அவரது மனைவி மோனிஷாவின் குடும்பத்தினரிடம், ராம்கி நேற்று பிற்பகலில் கீழே விழுந்ததாக இடத்தை மாறி மாறி பெரியகுளம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தங்களுக்கு முறையாக உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் உண்மை நிலை தெரியும் வரை நாங்கள் பிரேத பரிசோதனை செய்து உடலை வாங்கமாட்டோம் என்றும் கூறி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறை முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உறவினர்கள் காத்திருப்பு போராட்டம்:
மேலும் ராம்கி நேற்று உடல் நல குறைவால் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் தற்போது வரை பெரியகுளம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்தோ அல்லது ராம்கி பணிபுரியும் ஒப்பந்த நிறுவனத்தில் இருந்தோ யாரும் வந்து பார்க்கவில்லை என்று சந்தேகமும் தெரிவிக்கின்றனர். அவர்களது உறவினர்கள் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் மர்மமான முறையில் இறந்ததாக கூறி நடைபெற்று வரும் இப்போராட்டத்தால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.