Valimai Movie | வலிமைக்கு கட் அவுட் அடிக்க வைத்திருந்த பணத்தில் கல்லூரி மாணவிக்கு ஃபீஸ் கட்டி உதவிய அஜித் ரசிகர்கள்!
வலிமை படத்திற்கு கட் அவுட் அடிக்க வைத்திருந்த பணத்தை மாணவிக்கு கொடுத்து, உதவிய அஜித் ரசிகர்களுக்கு பாராட்டு குவிகிறது.

அஜித்குமார் நடிப்பில் உருவான ஆக்ஷன் த்ரில்லர் படமான 'வலிமை', தமிழ்நாடு முழுவதும் 24-ம் தேதி வெளியாகி சாதனையை படைத்தது. இப்படம் முதல் நாளில் சுமார் 28.25 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் சர்க்கார் படத்திற்கு அடுத்தபடியாக தமிழ்த் துறையில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது பெரிய படமாக உள்ளது. எச் வினோத்தின் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
Get ready to go 🤩🤯 as #Valimai will seize your attention its breathtaking actions!
— Boney Kapoor (@BoneyKapoor) February 26, 2022
Book your tickets to the nearest theatre.#ValimaiInCinemas #AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @IVYProductions9 @innamuri8888 @Venkatupputuri @sureshchandraa pic.twitter.com/dVBD8rLgvF
தொடர்ந்து, பல திரைவிமர்சகர்கள் வலிமை படத்தின் நீளம் அதிகமாக உள்ளதாகவும், படத்தை இன்னும் கொஞ்சம் கட் செய்து திரையிட்டு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வந்தனர். அதேபோல், அஜித் ரசிகர்கள் உள்பட பலரும் இதே கருத்தை முன்வைத்து வந்தனர். இதையடுத்து, படக்குழு தானாக முன்வந்து படத்தின் காட்சிகளை குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழில் 12 நிமிடங்கள் குறைக்கப்படுவதாகவும், இந்தியில் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியானது. இப்படி வலிமையின் அப்டேட்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்க, மதுரை மேலுரைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் வலிமை படத்திற்கு கட் அவுட் அடிக்க வைத்திருந்த பணத்தை கல்லூரி படிக்கும் ஏழை மாணவி ஒருவருக்கு காலேஜ் பீஸ் கட்டி உதவியுள்ளனர்.

அன்பின் அதிபதி அஜித் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ’அசல் வெங்கடேசன்’ நம்மிடம் பேசுகையில்..,” ஏ.கே அவர்களின் திரைப்படத்தை எப்போதும் கொண்டாடி தீர்ப்போம். மேலூர் கணேஷ் தியேட்டரில் அஜித் படத்தன்று திருவிழா கோலமாக இருக்கும். மேலூர் சுற்றுப்புற ரசிகர்கள் அனைவரும் அன்று சந்திப்போம். அதனால் எங்களுக்கு எப்போதும் கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வதில் போட்டி இருக்கும். இந்த சூழலில் வலிமை படத்திற்காக காத்திருந்தோம். எங்கள் டீமில் அனைவரும் கட் அவுட் அடிக்க பணத்தை சேர்த்து வைத்திருந்தோம். இந்த சூழலில் ஆசிரியராக உள்ள எனது அக்கா காஞ்சனா மூலம் ஒரு தகவல் வந்தது. கல்வியல் கல்லூரியில் படிக்கும் மாணவி நந்தினி என்ற மாணவி கல்லூரி படிக்க பணம் கட்ட சிரமப்படுகிறார் என தெரிவித்தார்.

இதை அறிந்து என் நண்பர்களிடம் பேசினேன். அதன் பின் பி.எட் படிக்கும் மாணவிக்கு கல்லூரி பணம் கட்ட முடிவு செய்து நாங்கள் பேனருக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து மாணவிக்கு காலேஜ் பீஸ் கட்டிவிட்டோம். மேலூர் பெருமாள்பட்டியை சேர்ந்த மாணவி நந்தினியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். பி.எஸ்.சி முடித்துவிட்டு தற்போது பி.ஏட் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக முழுமையாக அவரால் கல்லூரிக்கு பணம் கட்ட முடியவில்லை. பி.எட் படிப்பதால் அவருக்கு பிராஜெக்ட் செலவு அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடந்த வருடம் கூட கல்லூரிக்கு பணம் கட்டவில்லை. இதனால் இரண்டு ஆண்டுக்கும் சேர்ந்து 10 ஆயிரம் பணத்தை மாணவியின் பெயரில் கல்லூரிக்கு சென்று நேரடியாக கட்டிவிட்டோம். மீதம் இருந்த பணத்தில் சிறிய அளவு கட் அவுட் அடித்துக் கொண்டோம். மாணவி நந்தினிக்கு உதவியது எங்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது”. என்றார்.
வலிமை படத்திற்கு கட் அவுட் அடிக்க வைத்திருந்த பணத்தில் மாணவிக்கு உதவிய அஜித் ரசிகர்களுக்கு பாராட்டு குவிகிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Corporation election 2022 | மதுரை மேயர் பதவியில் அமைச்சருக்கு வலைபோடும் சாதி அரசியல்.. தப்புவாரா பி.டி.ஆர் !





















