Lok Sabha Election: அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தி.மு.க. வாக்குறுதிகளின் நகலா? ஆர்.பி. உதயகுமார் விளக்கம்
அதிமுக தேர்தல் அறிக்கை பிரின்டிங் மிஸ்டேக் ஏற்பட்டிருந்தால் ஒரு நாள் காலதாமதமாக வந்தது. திமுகவிற்கு முன்னால் நாங்கள் தேர்தல் அறிக்கை தயாரித்தோம் அதற்கான ஆதாரம் உள்ளது.
பாரத பிரதமர் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதினால் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வெளிச்சம் கிடைத்து வருகிறது. அவர் வந்து சென்ற பிறகு அவர்கள் இருட்டுக்குள் சென்று விடுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்:
தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி அதிமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் சந்திப்பில் நாராயணசாமி பேசும்போது, முதலில் புரட்சித்தலைவர் எனக் கூறிவிட்டு சாரி புரட்சித் தமிழர் என எடப்பாடியை முன்னிலைப்படுத்தி பேச்சை துவக்கினார். தேர்தல் வாக்குறுதி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பிரச்சாரத்தின் போது தேர்தல் வாக்குறுதி குறித்து பேசுவதாக அவர் தெரிவித்தார்.
ஆர்பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு :
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார். ஒரே இயக்கத்தில் 40 ஆண்டுகளாக இருப்பவர் நாராயணசாமி. அவரது உறுதித்தன்மையையும், எதிரணியில் இருப்பவர்களின் நிலைப்பாட்டின் மாற்றங்களும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். சிலர் நேரத்திற்கு தகுந்தாற்போல், சூழலுக்கு ஏற்றார் போல் மாறுபடுகிறார்கள். டி.டி.வி.தினகரன் உயிர் போகும் வரை பா.ஜ.க கூட்டணிக்கு போக மாட்டேன் எனக் கூறினார். அவரை மக்கள் மறந்து நாள்களாகி விட்டது.
அவரது நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க-வின் தற்போதைய வேட்பாளரையும், மக்கள் அவரின் சின்னம் என்ன எனக் கேட்கிறார்கள். ஆரம்பத்தில் இரட்டை இலை, பின்னர் குக்கர், பரிசுப்பெட்டியில் போட்டியிட்டு தற்போது தி.மு.க-வில் நிற்கிறார். ஒரு வேட்பாளர் எத்தனை சின்னத்தில்தான் நிற்பது? ஒரு நியாயம் வேண்டாமா என தங்க தமிழ்செல்வனை மறைமுகமாக விமர்சித்தார்.
தி.மு.க.வின் நகல் கிடையாது:
அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை தி.மு.க-வின் நகல் கிடையாது. ஒன்பது மண்டலங்களாக பிரிந்து விவசாயிகள், வணிகர்கள், மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும், அவற்றை எல்லாம் நிறைவேற்ற முடியுமா என சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை செய்தும்தான் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் எங்களிடம் இருக்கிறது. எந்த நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறோம்.
அதிமுக தேர்தல் அறிக்கை பிரின்டிங் மிஸ்டேக் ஏற்பட்டிருந்தால் ஒரு நாள் காலதாமதமாக வந்தது. திமுகவிற்கு முன்னால் நாங்கள் தேர்தல் அறிக்கை தயாரித்தோம். அதற்கான ஆதாரம் உள்ளது. பாரத பிரதமர் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதினால் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வெளிச்சம் கிடைத்து வருகிறது. அவர் வந்து சென்ற பிறகு அவர்கள் இருட்டுக்குள் சென்று விடுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.





















