மேலும் அறிய
திண்டுக்கல்: மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொன்ன தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம்
மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய கூறிய தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. - அரசு தரப்பு

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான விசாரணையை தொடங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட கணவாய் பட்டி கிராமத்தில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கு பயிலும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும் படி கட்டாயப்படுத்தியும் அதனை அவர்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க கூடாது என்று கழிவறை சுத்தம் செய்யும் மாணவர்களிடம் ரூ10 கொடுத்து வந்துள்ளார். தலைமை ஆசிரியர் பள்ளிக்கு சரிவர வராமல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பெண்ணை ரூ.3000 தொகைக்கு வேலைக்கு வைத்து அவர்களையே பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வைக்கிறார். இதனால், மாணவர்களில் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. எனவே, பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் இவர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்தி துரை ரீதியான நடவடிக்கையை ஒரு வார காலத்திற்குள் எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய கூறிய தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான விசாரணையை தொடங்க உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
வியாபாரியிடம் 10 லட்சம் பணம் பறிப்பில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி வியாபாரியிடம் 10 லட்சம் பணம் பறித்ததாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டது பின்னர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் நீதிமன்றம் நிபந்தனைகளை பின்பற்றாமல் சாட்சியங்களை கலைக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளார். எனவே, இவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், காவல் ஆய்வாளர் வசந்தி நீதிமன்ற நிபந்தனையை மீறி வழக்கின் எதிரிகளை சந்தித்து தனக்கு சாதகமாக சமாதானமாக போவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது நீதிமன்றத்தின் நிபந்தனையை மீறி சாட்சிகளை மிரட்டும் விதமாக உள்ளது. எனவே, நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனையை மீறி உள்ளார். எனவே இவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி மனு குறித்து காவல் ஆய்வாளர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















