பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்.. திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு.. நடந்தது என்ன?
பழனி திருக்கோவில் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் உரிய சிகிச்சை அளிக்காததால் பக்தர் ஒருவர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்.
பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். திருக்கோவில் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் உரிய சிகிச்சை அளிக்காததால் பக்தர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
TN Assembly: 'ஆளுநருக்கு அட்வைஸ் பண்ணுங்க..' சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் நிறைவேற்றம்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு, கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், அவரது மனைவி அனிதா மற்றும் பெண் குழந்தையுடன் வருகை தந்தார். பழனியில் உள்ள அவரது உறவினர்களுடன் முடி காணிக்கை செலுத்தி விட்டு படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு மேலே சென்றார். அப்போது மலை உச்சியை அடையும் முன்பு உள்ள விநாயக கோவில் முன்புறம் ஜெயச்சந்திரனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனால் மயக்கம் அடைந்தவரை உடனடியாக அருகில் இருந்த திருக்கோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பணியில் மருத்துவர்கள் இல்லாததால் அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு வந்த மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரோப் கார் மூலமாக மலை அடிவாரத்திற்கு அழைத்துவரப்பட்ட ஜெயச்சந்திரனை அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த திருக்கோவில் ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
ஆனால் திருக்கோவில் ஆம்புலன்ஸில் வெண்டிலேட்டர் வசதி இல்லாததால் பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே ஜெயச்சந்திரன் பரிதாபமாக உயிரழந்தார். பழனி அரசு மருத்துவமனையில் ஜெயசந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயச்சந்திரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சரியான நேரத்தில் திருக்கோவில் மருத்துவமனையில் மருத்துவசிகிச்சை அளித்திருந்தாலோ, திருக்கோவில் ஆம்புலன்ஸில் வெண்டிலேட்டர் வசதி இருந்திருந்தாலோ ஜெயச்சந்திரன் உயிர் பிழைத்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். இதே போல அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதும் கோவில் நிர்வாகம் மலைக்கோவிலில் நிரந்தரமாக மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டுமெனவும் ,நவீன வசதிகளுடன் கூடிய வகையில் ஆம்புலன்ஸ்கள் வாங்க வேண்டும் எனவும் பக்தர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்