Jallikattu: 9,312 காளைகள்; 3,669 வீரர்கள்.. ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்
Jallikattu: ஆண்டு தோறும் பொங்கல் கொண்டாடப்படும் போது தமிழ் நாட்டில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகின்றது.
![Jallikattu: 9,312 காளைகள்; 3,669 வீரர்கள்.. ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் 9,312 bulls; 3,669 players getting ready for Jallikattu Kalaingnar Centenary Jallikattu Hall Kilakarai Village Vadipatti Jallikattu: 9,312 காளைகள்; 3,669 வீரர்கள்.. ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/041a13dacabd2be54bda0509f7be55151705831220598102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுவருகின்றது. ஆண்டுக்கு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களின் எண்ணிக்கையும் காளைகளின் எண்ணிக்கையும் வெளிவந்து கொண்டுள்ளது. இந்நிலையில் வரும் 24ஆம் தேதி அதாவது வரும் புதன் கிழமை மதுரை கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது. அன்றைய தினமே ஜல்லிக்கட்டுப் போட்டியும் நடைபெறவுள்ளது. இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு கலந்துகொள்ள விரும்பும் வீரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதன் அடிப்படையில், 24ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் மொத்தம் ஒன்பதாயிரத்து 312 காளைகள் களமிறங்குகின்றது. இந்த காளைகளை அடக்க, மூன்றாயிரத்து 669 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர். புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்!” என குறிப்பிட்டிருந்தார்.
தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல்#ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று,
— M.K.Stalin (@mkstalin) January 17, 2024
அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை
25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.
புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை,
சுமார் 3 இலட்சம்… pic.twitter.com/Jel6NJHwRh
கடந்த வாரத்தில் நடந்த உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த உலகப் புகழ்பெற்ற 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த கருப்பாயூரணியைச் சார்ந்த கார்த்திக் பரிசாக கார் வென்றார் எனபது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசின் ஒத்துழைப்பு அளிக்கட்டுள்ளது. ஆனால் முதல்முறையாக அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஒரு மைதானத்தை அமைத்து அரசே நடத்துவது இதுவே முதல்முறை என்பதால், ஜல்லிகட்டு வீரர்கள், ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)