காதலித்து ஏமாற்றி விட்டதாக போஸ்டர் ஒட்டிய பெண் கைது - நிலக்கோட்டையில் பரபரப்பு
நிலக்கோட்டை இளைஞரின் முகநூல் நட்பு. காதலித்து ஏமாற்றி விட்டதாக போஸ்டர் ஒட்டிய பொள்ளாச்சி பெண் உட்பட 3 பேர் கைது.
நிலக்கோட்டை இளைஞரின் முகநூல் நட்பின் விளைவால் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக போஸ்டர் ஒட்டிய பொள்ளாச்சி பெண் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருவையா. இவர், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூ ஏற்றுமதி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ரோஷன் பட்டதாரி இளைஞர் ஆவார். ரோஷனுக்கு பொள்ளாச்சி அருகே வடக்கு பாளையத்தை சேர்ந்த உஷா என்ற பெண் முகநூல் மூலம் அறிமுகமானார். இந்த நட்பு பல மாதங்கள் சாட்டிங் மூலம் தொடர்ந்து உள்ளது. தனது நட்பை உஷா காதலாக மாற்றுவதற்கான முயற்சியை தொடங்கியுள்ளார். அவரின் போக்கு பிடிக்காமல் ரோஷன் தனது முகநூல் பக்கத்தை முடக்கி விட்டு போன் நம்பரையும் பிளாக் செய்து உள்ளார். இதனைத் தொடர்ந்து நட்பை தொடர முடியாத உஷா பல்வேறு செல்போன் நம்பர்களில் இருந்து பேசி ரோசனை தொடர்ந்து தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
கடைசியில் பொள்ளாச்சியில் இருந்து தனது உறவினர் கிருஷ்ண வேணி என்பவர் உடன் கொங்கப்பட்டிக்கு வந்துள்ளார். அந்த கிராமத்தில் இருந்த சிவஞானம் என்பவரிடம் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக சொல்லி பிரச்சினையை பேசி தீர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார். அவர் உஷாவிற்கு உதவ முன்வந்த நிலையில் திடீரென கொங்கபட்டி பகுதியில் நிலக்கோட்டையில் பூக்கடை வைத்திருக்கும் கொங்கு பட்டியைச் சேர்ந்த குருவையா மகன் ரோஷன் என்பவர் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார் என்ற வாசகங்களுடன் ரோஷனும் உஷாவும் இணைந்து இருக்கும் போஸ்டர் அப்பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது .
இதனைத் தொடர்ந்து ரோஷன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் உஷா தன் நண்பர்களுடன் இணைந்து குருவையாவை வழிமறித்து ரோஷன் விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் இருக்க ரூபாய் 5 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது . இதனைத் தொடர்ந்து தன்னை பணம் கேட்டு மிரட்டியும் தன் மகன் மீது அவதூறு போஸ்டர் ஒட்டியதாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் குருவையா புகார் அளித்தார் .
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நிலக்கோட்டை போலீசார் முகநூல் பெண் பொள்ளாச்சி உஷா மற்றும் கிருஷ்ணவேணி, சிவஞானம் உட்பட மூன்று பேரை கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.