"மகளிர் உரிமைத் தொகை பாதி டாஸ்மாக்குக்கு போகுது..! மீதி சைட்டிஷ்க்கு போது" முன்னாள் அமைச்சர் வளர்மதி பரப்புரை
மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000த்தில் பாதி டாஸ்மாக்கிற்கும், மீதி சைட்டிஷ்க்கும் செல்கிறது என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தல்
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது . இன்று முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இ. ராஜசேகர் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகிறார். களக்காட்டூர், குருவிமலை, பலத்தோட்டம், ஐயங்கார் குளம், கோளிவாக்கம், ஆசூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இரட்டை இலை சின்னத்தில் வாக்கு
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, வி சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு அதிமுகவிற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர். திறந்தவெளி வாகனத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியதாவது: எல்கேஜி படிக்கும் குழந்தைக்கு கூட திமுக அரசு வந்ததிலிருந்து பாதுகாப்பு இல்லை அயோக்கியர்கள் , காவல்துறை உதவியுடனே குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள்.
இது எல்லாத்துக்கும் காரணம் கஞ்சா தான், கஞ்சா காவல்துறை உதவியுடனே விற்கப்படுகிறது . தவறு செய்பவர்களை பிடித்து விசாரித்தால் , கஞ்சா போதையில் செய்துவிட்டேன் என கூறுகிறார்கள் . அடுத்ததாக இரண்டு ஆண்டுகள் மகளிர் உரிமை திட்டம் தர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த அழுத்தத்தால் ஒரு சில பேருக்கு கொடுத்திருக்கிறார்கள் . வீட்டில் பையன் வேலை செய்தால் ஆயிரம் ரூபாய் இல்லை , சைக்கிள் இருந்தால் ஆயிரம் ரூபாய் இல்லை என பல்வேறு காரணத்தைக் கூறி தகுதி இல்லை எனக் கூறுகிறார்கள் .
பெண்ணாக இருந்தாலே தகுதி தானே அதைவிட வேறு என்ன தகுதி வேண்டும் என கேள்வி எழுப்பினார். அப்படி வரும் ஆயிரம் ரூபாயை கூட பெண்கள் அவர்கள் தேவைக்கு பயன்படுத்த முடியவில்லை அதை ஆண்கள் பிடுங்கிக் கொண்டு சென்று 500 ரூபாய் சரக்கும் 500 ரூபாய் சைடிஷ்க்கும் சென்று விடுகிறது . முட்டை ,சிக்கன் ஆகியவற்றை சைட் டிஷ்ஷாக வாங்கி கொள்கிறார்கள் " என பேசி பெண் வாக்காளர்கள் மத்தியில் வாக்குகளை சேகரித்தார் .
2019 தேர்தல் நிலவரம் எப்படி ?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2014 தேர்தல் நிலவரம்
அதிமுக வேட்பாளர் மரகத குமரவேல் 4,99,395 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 3,52,529 வாக்குகளை பெற்றார். மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா 2,07,080 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
2021 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்
காஞ்சிபுரம் - எழிலரசன் ( திமுக )
உத்திரமேரூர் - சுந்தர் ( திமுக=
செங்கல்பட்டு - வரலட்சுமி ( திமுக )
திருப்போரூர் - எஸ். எஸ்.பாலாஜி (விசிக)
செய்யூர் - பாபு (விசிக)
மதுராந்தகம் - மரகதம் (அதிமுக)
உத்திரமேரூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டது.