40 ஆண்டு கால கோரிக்கை.. கட்டப்பட்ட தடுப்பணை! மகிழ்ச்சியில் விவசாயிகள்.. முப்போகம் விளைச்சல் தான்!
Thollazhi Check Dam " 40 வருட கோரிக்கையாகும், இதற்கு முன்பு ஒரு போகம் பயிர் விளைவிக்கப்பட்டது, தற்போது அணைக்கட்டு கட்டப்பட்டதன் மூலம் இரு போகம் பயிர் வைத்து பயனடைவோம் "
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூர் கிராமத்தின் அருகே தொள்ளாழி மடுவின் குறுக்கே ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு திறக்கப்பட்டது.
ஏரிகள் மாவட்டம் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. ஏரிகள் அதிகளவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருப்பதால், நீர் பாசனத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலை ஆன இடங்களில் முறையான நீர் தேக்க வசதிகள் இல்லாததால், ஒருபோகம் மட்டுமே விவசாயிகள் பயிர் வைத்து வருகின்றனர். இதனால் விவசாயங்கள் பல இடங்களில் , தடுப்பணை கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்தவகையில் , வாலாஜாபாத் அடுத்த தொள்ளாழி கிராமத்தை சார்ந்த விவசாயிகள் சுமார் 295 ஏக்கர் நிலங்கள் கூடுதல் விவசாயம் செய்ய ஏற்கனவே, உள்ள அணைக்கட்டுக்கு கீழ் புதிய அணைக்கட்டு அமைத்து தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து ரூ7 கோடி மதிப்பீட்டில் 27 மீ நிளம், 1.48 மீ உயரம், அதிகபட்ச வெள்ள நீரின் அளவு 5392 கன அடி, நீர் வெளியேறும் அளவு 4797 கன அடி கொண்ட புதிய அணைக்கட்டு அமைக்கப்பட்டது. இதன் மூலம் மழைக்காலத்தில் வெள்ள நீர் வீணாக செல்வது தடுக்கப்பட்டு, தொள்ளாழி, தோனாகுளம் மற்றும் உள்ளாவூர் ஆகிய கிராமங்களில் உள்ள 291 ஏக்கர் விளை நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெறும்.
பயனடையும் விவசாயிகள்
தடுப்பணை கட்டி பயன்பாட்டிற்கு வந்தால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மூன்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைய உள்ளனர். இதன்மூலம் குறைந்த பட்சம் இப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் இரண்டு போகம் பயிர் செய்ய முடியும். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் நன்மையை இந்த தடுப்பணை கொடுக்கும். அதேபோன்று சுற்றுவட்டாரங்களுக்கு குடிநீர் ஆழ்துளைக்கிணறுகள் இதன் அருகே அமைக்கப்பட்டுள்ளதால், குடிநீருக்கும் இந்த தடுப்பணை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்
அதனை தொடர்ச்சியாக, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூர் கிராமத்தின் அருகே தொள்ளாழி மடுவின் குறுக்கே ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, அணைக்கட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ஆகியோர் பார்வையிட்டனர்.
விவசாயிகள் கூறுவது என்ன ?
இது குறித்து பெண் விவசாயி வீரலட்சுமி தெரிவிக்கையில்: எங்கள் குடும்பம் வழிவழியாக விவசாயம் செய்து வருகிறது. தொள்ளாழி கிராமத்தை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. இந்த அணைகட்டு கோரிக்கை எங்களது 40 வருட கோரிக்கையாகும், இதற்கு முன்பு ஒரு போகம் பயிர் விளைவிக்கப்பட்டது, தற்போது அணைக்கட்டு கட்டப்பட்டதன் மூலம் இரு போகம் பயிர் வைத்து பயனடைவோம் எனவும், இதன் மூலம் தொள்ளாழி விவசாயிகள் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி அயூப் கான் கூறுகையில், தென்னேரியில் இருந்து வரும் நீர்மூலம் விவசாயம் செய்யும் கிராமங்களில் 22 ஆவது கிராமமாக எங்கள் கிராமம் இருந்து வருகிறது. எனவே இப்பகுதியில் ஒருபோகம் மட்டுமே விவசாயம் செய்து வந்தோம். நீண்ட வருடம் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும், எனவே தமிழக அரசுக்கு நன்றி என தெரிவித்தார்.