New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டம்.. இன்று மாலை ஸ்விக்கி, சொமேட்டோ ஊழியர்கள் ஸ்ட்ரைக்!
ஆண்டின் கடைசி நாளில் ஆன்லைன் டெலிவரி அதிகளவில் இருக்கும் நிலையில் இப்படியான வேலை நிறுத்தம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம் பெருநகரங்களில் இந்த சேவையில் 50 சதவிகிதம் வரை பாதிக்கப்படலாம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆன்லைன் உணவு மற்றும் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஜனவரி 1ம் தேதி அழைப்பு விடுத்துள்ளனர். ஏற்கனவே 2025 கிறிஸ்துமஸ் நாளில் வேலை நிறுத்தம் செய்ததால் வணிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நாளையும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Zomato, Swiggy, Blinkit, Zepto மற்றும் Amazon போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் பணியாற்றும் டெலிவரி பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த ஊதியம், பலவீனமான வேலைப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு தழுவிய அளவில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் நிலையில் புத்தாண்டு கொண்டாட காத்திருக்கும் மக்கள் கவலையடைந்துள்ளனர். அதேபோல் புத்தாண்டு கொண்டாட்டத்தால் வியாபாரம் சிறப்பாக நடக்கும் என கணித்திருந்த வணிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
எனவே புத்தாண்டை உணவு மற்றும் பரிசுப் பொருட்களுடன் கொண்டாட நீங்கள் நினைத்தால் முன்கூட்டியே திட்டமிடுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் கடைசி நாளில் ஆன்லைன் டெலிவரி அதிகளவில் இருக்கும் நிலையில் இப்படியான வேலை நிறுத்தம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம் பெருநகரங்களில் இந்த சேவையில் 50 சதவிகிதம் வரை பாதிக்கப்படலாம்.
முதலில் இந்த வேலை நிறுத்த போராட்டமானது தெலுங்கானா கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இந்திய ஆப்-அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றால் அறிவிக்கப்பட்டது. இதனை மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி-NCR, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த ஆன்லைன் பிளாட்ஃபார்ம் தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் தினத்தன்று போராட்டம் நடைபெற்றது.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டெலிவரி தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஆள் பற்றாக்குறை காரணமாக தாமதமான டெலிவரி மற்றும் சேவை கட்டணம் உயரலாம் என சொல்லப்படுகிறது. பணி நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் நிலைமையை மேம்படுத்தவில்லை. இதனால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மோசமடைகிறது. அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வரத்தான் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தால் உணவு ஆர்டர்கள், மளிகைப் பொருட்கள் விநியோகம் மற்றும் கடைசி நிமிட ஷாப்பிங் ஆகியவை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆயோக் ஆய்வின்படி, 2029-2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஆன்லைன் பொருட்கள் டெலிவரி தொழிலாளர்கள் 2.35 கோடி பேர் இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















