மூழ்கடிக்கும் மூடநம்பிக்கை.. செல்லப்பிராணியை பலி கொடுத்த பெண்.. பெங்களூருவில் பரபர
தனது செல்லப் பிராணியான லாப்ரடோர் நாயை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் இளம்பெண். பின்னர், அந்த நாயின் உடலை ஒரு துணியில் சுற்றி, ஜன்னல்கள் மற்றும் கதவுகளையும் மூடிவிட்டு, குடியிருப்பைப் பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

பெங்களூருவில் பெண் ஒருவர், தனது செல்லப்பிராணி நாயை பலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாந்திரீக சடங்கின் ஒரு பகுதியாக நாயின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்து வீட்டினர் புகார் அளித்த நிலையில், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மூழ்கடிக்கும் மூடநம்பிக்கை!
மூடநம்பிக்கை என்பது மக்களை காலம் காலமாக மூட்டளாக்கி வருகிறது. நம்பிக்கை என்ற பெயரில் கண்மூடித்தனமாக ஒரு விஷயத்தை நம்புவது என்பது சமூகத்தில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், கேரளாவில் நடந்த நரபலி சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது.
மூடநம்பிக்கைக்கு எதிராக பெரியார், ஜோதிபா பூலே போன்ற தலைவர்கள் தொடர் பிரசாரம் செய்தபோதிலும், அது நின்றபாடில்லை. அதன் தொடர்ச்சியாக நடந்துள்ள பெங்களூரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்லப்பிராணியை பலி கொடுத்த பெண்:
திரிபர்ணா பயக் என்ற பெண், தனது செல்லப் பிராணியான லாப்ரடோர் நாயை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர், அந்த நாயின் உடலை ஒரு துணியில் சுற்றி, அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளையும் மூடிவிட்டு, குடியிருப்பைப் பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
சில நாட்களுக்குப் பிறகு, அடுக்குமாடி குடியிருப்பின் அருகே இருந்து அழுகிய வாசனை வருவதை அக்கம்பக்கத்தினர் கவனித்தபோது, அவர்கள் பெங்களூரு நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் கதவைத் திறந்தபோது, கழுத்தில் வெட்டுக்காயத்துடன் அழுகிய நாயின் உடலைக் கண்டனர்.
அந்த குடியிருப்பில் சில பொருட்களும் காணப்பட்டன. வீட்டைச் சுற்றி பல மதப் படங்கள் சிதறிக்கிடந்தன. தாந்திரீக சடங்கு, ஏதேனும் நடத்தப்பட்டதா என்ற அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர். கூடுதலாக, வீட்டினுள் இரண்டு நாய்கள் (உயிருடன்) சுவருடன் கட்டி போடப்பட்டிருந்தன.
பெங்களூருவில் பரபர:
குறிப்பிட்ட வீட்டில் இருந்து அழுகிய வாசனை வருவதாக புகார் அளித்த மருத்துவர் ருத்ரேஷ் குமார், "பி.எம்.பி மருத்துவமனையில் நாய்கள் சிகிச்சை பெற்று வருகின்றன" என்றார். லாப்ரடோர் நாயின் பிரேத பரிசோதனையில் அது நான்கு நாட்களுக்கு முன்பு இறந்தது தெரியவந்தது.
மகாதேவ்புரா காவல் நிலையத்தில் விலங்கு துன்புறுத்தல் மற்றும் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அந்தப் பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பில்லி சூனியம் வைப்பதற்காக இந்தக் கொடூரமான குற்றத்தை செய்தாரா அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் மனநிலை இதற்குக் காரணமா என்று காவல்துறை விசாரித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட பெண், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





















