சாண்ட்விச்சில் புழு! ஷாக்கான பயணி! மன்னிப்பு கேட்ட இண்டிகோ விமான நிறுவனம்
டெல்லி - மும்பை நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட விமானத்தில் கொடுக்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததாக பெண் பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சமீப காலமாக, இண்டிகோ விமான நிறுவனத்தின் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. குறிப்பாக, விமான நிறுவனத்தின் பணியாளர்கள் மீதும் அதன் சேவை மீதும் தொடர் புகார்கள் குவிந்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை பொறுத்தவரையில் ஏகபோகமான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது இண்டிகோ. இந்தியாவில் இயக்கப்படும் 63.4 சதவீத உள்நாட்டு விமானங்கள், இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமானவை.
புகார் அளித்த பெண் பயணி:
இந்த நிலையில், டெல்லி - மும்பை நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட விமானத்தில் கொடுக்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததாக பெண் பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் பயணி, இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மின்னஞ்சலில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ புகாரை கூடிய விரைவில் பதிவு செய்வேன். ஆனால், ஒரு பொது சுகாதார நிபுணராக, சாண்ட்விச்சின் தரம் நன்றாக இல்லை என்பதை அறிந்திருந்தும், விமான பணிப்பெண்ணிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும், அவர் மற்ற பயணிகளுக்கு சாண்ட்விச்களை தொடர்ந்து வழங்கினார். விமானத்தில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பிற பயணிகள் இருந்தனர். யாருக்காவது தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது?
எனக்கு, எந்தவொரு இழப்பீடும் தேவையில்லை. பயணிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மன்னிப்பு கேட்ட இண்டிகோ விமான நிறுவனம்:
இதை தொடர்ந்து, புகார் அளித்த பெண்ணிடம் இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்த அனுபவம் குறித்து பயணி ஒருவர் எழுப்பிய பிரச்னை குறித்து நாங்கள் அறிவோம்.
விமானத்தில் அளிக்கப்படும் உணவு மற்றும் பானத்தின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதற்கான எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். எங்கள் குழுவினர் குறிப்பிட்ட சாண்ட்விச்சின் சேவையை உடனடியாக நிறுத்திவிட்டனர்.
View this post on Instagram
இந்த விவகாரம் தற்போது முழுமையான ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. சரியான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உணவளிப்பாளருடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். பயணிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.