Sudan Clash Indians: சூடானில் 3 நாட்களுக்கு போர் நிறுத்தம்.. கலவரத்திற்கு மத்தியில் இந்தியர்களை மீட்க திட்டமா?
சூடானில் வெடித்துள்ள உள்நாட்டு கலவரத்திற்கு மத்தியில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சூடானில் வெடித்துள்ள உள்நாட்டு கலவரத்திற்கு மத்தியில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சூடான் கலவரம்:
ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் அதிகாரத்தை கைப்பற்றும் விவகாரத்தில், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே அண்மையில் கலவரம் வெடித்தது. இதனால், சூடானின் பல முக்கிய நகரங்கள் போர் களங்களாக மாறியுள்ளன. இதில் ராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். ஏழாவது நாளை எட்டியுள்ளஇந்த கலவரத்தால் ஏற்கனவே கேரளாவை சேர்ந்த இந்தியர் ஒருவர் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது. இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உலக நாடுகள் தீவிரம்:
பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தாக்குதலை 3 நாட்களுக்கு நிறுத்த வேண்டும் என சூடான் ராணுவ தலைமைக்கு அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையும் இதே கோரிக்கையை முன்னிறுத்தியுள்ளது. இதையேற்று 72 மணி நேரத்திற்கு சூடானில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சுடானில் சிக்கி தவித்து வந்த இந்தோனேசியர்களை அந்நாட்டு அரசு பத்திரமாக மீட்டுள்ளது. இதேபோன்று, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தங்கள் மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசு விளக்கம்:
இந்த சூழலில் தான், சூடானில் வெடித்துள்ள உள்நாட்டு கலவரத்திற்கு மத்தியில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "சூடானில் நடந்து வரும் நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமை பதற்றமாக உள்ளது. அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம். பிற நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். சூடான் நிலவரம் குறித்து நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்செயலாளரை, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசுவார்" என்றார்.
”திட்டம் உள்ளது”
சூடானில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்களா? என்று கேட்டதற்கு, ''சில திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அது கள நிலவரத்தை பொறுத்தது'' என அரிந்தம் பக்சி கூறினார்.
24 மணி நேர ஒப்பந்தத்தையும் மீறி, சூடானில் இந்தியர்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் இந்தியர்கள் தவித்து வருகின்றனர் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சூடான் நிலவரம்:
சூடானில் விவசாய நிலம், தங்கச் சுரங்கங்கள், எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகள் அதிகம் உள்ளன. சூடானின் ஏற்றுமதி வருவாயில் 73% எண்ணெய் ஏற்றுமதி வாயிலாக கிடைக்கின்றது. எல்லா வளமும் இருந்தும் சூடான் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இருப்பதற்கு அங்கே நிலையான ஆட்சி இல்லாதது தான் காரணம். ஜனநாயக அரசு இல்லாததால், சிறு குழுக்களும், கிளிர்ச்சியாளர்களும், ராணுவமும்தான் ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்பது குறிப்பித்தக்கது.