தண்ணீர் விலையும் உயர்கிறது? பெங்களூருவில் வாழ முடியாத நிலை.. என்னதான் பிரச்னை?
அத்தியாவசிய பொருட்களின் விலை பெங்களூருவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மின்சாரம், பேருந்து, மெட்ரோ ரயில், டீசல் ஆகியவற்றின் விலை சமீபத்தில்தான் உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தண்ணீர் பில்லும் உயர உள்ளது.

மின்சாரம், பேருந்து, மெட்ரோ ரயில், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு பெங்களூருவாசிகளை வெகுவாக பாதித்துள்ள நிலையில், இதற்கு அடுத்தபடியாக 10 ஆண்டுகளில் முதல்முறையாக தண்ணீர் கட்டணத்தின் விலையும் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பெங்களூருவில் தண்ணீர் கட்டணத்தை லிட்டருக்கு ஒரு பைசா உயர்த்த வாய்ப்பிருப்பதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்வு:
கர்நாடகாவில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பல்வேறு சமூக நலத்திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்து, பாஜகவை வீட்டுக்கு அனுப்பியது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ். சொன்ன பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் விலைவாசி உயர்வு பெங்களூருவாசிகளை நெருக்கடியில் தள்ளியுள்ளது.
குறிப்பாக, அத்தியாவசிய பொருட்களின் விலை பெங்களூருவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மின்சாரம், பேருந்து, மெட்ரோ ரயில், டீசல் ஆகியவற்றின் விலை சமீபத்தில்தான் உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தண்ணீர் பில்லும் உயர உள்ளது.
பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB), பெங்களூருவில் தண்ணீர் கட்டணத்தை லிட்டருக்கு ஒரு பைசா உயர்த்த வாய்ப்பிருப்பதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கர்நாடகாவில் விலை உயர்வு குறைவாக உள்ளது.
தண்ணீர் பில்லும் உயர்கிறது?
தண்ணீர் கட்டணத்திலும் எங்களுக்கு வேறு வழியில்லை. லிட்டருக்கு ஒரு பைசா அல்லது அரை பைசா அதிகரிக்க வேண்டும். நாங்கள் அதற்கு மேலும் உயர்த்த முடியாது. ஏழைகளுக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். இதுகுறித்து முடிவு எடுக்க வாரியத்தை (BWSSB) கேட்டுள்ளேன். ஆனால், சிறிய வீடுகளுக்கான விலையை நாங்கள் உயர்த்த மாட்டோம்" என்றார்.
இந்தியாவில் மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாக விலைவாசி உயர்வு அதிகம் உள்ள நகரமாக பெங்களூரு உள்ளது. காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை பாஜக நேற்று தொடங்கியது,
பால் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதன் மூலமும், மின்சார கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும் பொதுமக்கள் மீது நிதிச் சுமையை சுமத்துவதாக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளது. வீட்டின் தண்ணீர் கட்டணமும் மாதத்திற்கு ரூ.400 முதல் ரூ.500 வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















