EVM Vehicle: இவிஎம் இயந்திரங்களை ஏற்றி சென்ற வாகனம்.. அஸ்ஸாமில் ஆற்றில் மூழ்கியதால் பரபரப்பு!
EVM: அஸ்ஸாமில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றி சென்ற வாகனம் ஆற்றில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
EVM Vehicle: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் பரபரப்பு:
அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில், லக்கிம்பூர் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றி சென்ற வாகனம் ஆற்றில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதியாவில் உள்ள அமர்பூர் பகுதியில் வாக்குச்சாவடி மையம் ஒன்றில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதலில் கார் மூலமாக வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்து செல்லப்பட்டது. பின்னர், ஆற்றை கடப்பதற்காக படகு மூலம் வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்து செல்லப்பட்டது. அப்போது, ஆற்றை கடக்கும்போது திடீரென நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், படகு மீது இருந்த கார் ஆற்றில் பாதி மூழ்கியது. வாகனத்திற்குள் தண்ணீர் புகுவதற்கு முன் ஓட்டுநரும், வாக்குச்சாவடி அதிகாரியும் வாகனத்தில் இருந்து வெளியேறிவிட்டனர்.
STORY | Vehicle carrying EVM sinks in Assam river
— Press Trust of India (@PTI_News) April 19, 2024
READ: https://t.co/wMn6VWZgf4 pic.twitter.com/dJLXc491E7
எந்த மாநிலங்களில் எல்லாம் தேர்தல் நடக்கிறது?
அருணாச்சல பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும் பீகாரில் 4 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மணிப்பூர், மேகாலயாவில் தலா 2 தொகுதிகளுக்கும் மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு, புதுச்சேரியில் தலா 1 தொகுதிக்கும் தேர்தல் நடந்து வருகிறது. ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும் உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. உத்தரகாண்டில் 5 தொகுதிகளுக்கும் மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
முதற்கட்ட தேர்தலில் 2 முன்னாள் முதலமைச்சர்கள், 8 மத்திய அமைச்சர்கள், முன்னாள் ஆளுநர் என பல நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: Manipur Firing: வாக்குச்சாவடியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள்.. மணிப்பூரில் தொடர் பதற்றம்!