ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்
திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்தது என்ன? கொலையின் பின்னணியில் இருப்பது யார்? என்பது தொடர்பாக முதல்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி மற்றும் அலமேலு தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களது மகனான செந்தில்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவையில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக செந்தில்குமார் தனது சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் தங்கியுள்ளார்.
தனக்கு ஷேவிங் செய்ய வேண்டும் என சவரத் தொழிலாளி ஒருவரை காலை தனது வீட்டிற்கு வருமாறு தெய்வசிகாமணி சொல்லியுள்ளார். அதற்காக அதிகாலையே வீட்டுக்கு வந்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிகு வெளியே தோட்டத்தில் தெய்வசிகாமணி வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உள்ளே அவரது மனைவியும் மகனும் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தெய்வசிகாமணியை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது.
நள்ளிரவில் நடந்தது என்ன என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூர்மையான கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த 8 பவுன் நகைகள் மற்றும் சில பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டும் வீட்டின் வெளியே இருப்பதை பார்த்தால், சத்தம் கேட்டு அவர் வெளியே வரும் போது தாக்குதல் நடந்திருக்கலாம், மற்ற 2 பேரும் வீட்டுக்குள்ளேயே வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. நகைக்காக இந்த கொலை நடந்துள்ளதா அல்லது முன்பகை ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பமானது.
தோட்டத்தில் விவசாயம் பார்த்து வந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் பிரச்னை செய்து வந்ததால், அவரை தெய்வசிகாமணி 20 நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கியுள்ளார். அதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த நபர் இந்த கொலையை செய்திருப்பதற்கான வாய்ப்பிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையில் 2 பேராவது ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.