Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் மழைநீர் தேங்க ஆரம்பித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மட்டும் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
சென்னையில் அதி கனமழை
புயல் சென்னை, மகாபலிபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் மழைநீர் தேங்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் மெட்ரோ ரயில் வழக்கம்போல இயங்கி வருகிறது. எனினும் மெட்ரோ ரயில் பயணிகள் கவனிக்க வேண்டிய சில அறிவுறுத்தல்களை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* சென்னையில் இன்று (நவ.30) வழக்கம் போல், காலை 5.30 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கி உள்ளது.
* வழக்கமான ரயில் சேவை எவ்வித தாமதம் இன்றி ஆரம்பிக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் தங்கள் பயணத்தை முன்னரே திட்டமிட்டுக் கொள்ளலாம்.
கவனம் தேவை
* மழை என்பதால் படிக்கட்டுகள், நடக்கும் வழித்தடங்களை பயணிகள் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
*கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் ஏரியாவில் மழைநீர் தேங்கக்கூடும் என்பதால் இன்று முதல் (நவ.30) பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம். பார்க்கிங்கை பயன்படுத்துவது குறித்த மறு அறிவிப்பு வரும் வரை இதே நிலை நீடிக்கும்.
இதோ உதவி எண்கள்
* ஏதேனும் உதவி வேண்டுவோர் 1800 425 1515 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உதவி கோரும் பெண்கள் 155370 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த நிலையில், மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ''பயணிகள் தங்களின் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை உடனடியாக செயிண்ட் தாமஸ் மவுன்ட் பார்க்கிங்கில் இருந்து எடுத்துவிட வேண்டும் எனவும் நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்து வருவதால், வண்டிகள் சேதமாகி விடக்கூடும்'' என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.