Rabies: நாயை போல மாறிய 8 வயது சிறுவன்..! உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..! நடந்தது என்ன..?
உத்தரபிரதேசத்தில் வெறி பிடித்த நாய் கடித்ததால் 8 வயது சிறுவன் ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்தியாவில் மனிதர்களின் செல்லப்பிராணிகளாக இருப்பதில் முதலிடத்தில் இருப்பது நாய்கள். வீடுகளிலும், தெருக்களிலும் நாய்கள் நடமாட்டம் இந்தியாவில் அதிகளவில் உள்ளது. நாய்களை முறையாக பராமரிக்காவிட்டாலோ, அல்லது அதன் மூலம் ஏற்படும் தொற்றுகளினாலோ மனிதர்களுக்கு பல வித வியாதிகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
குறிப்பாக, நாய் கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் அது மோசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதுவும் வெறிபிடித்த நாய் கடிப்பதற்கு உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் மனிதனின் செயல்பாடுகள் நாயைப் போலவே மாறுவதற்கான ஆபத்துகள் அதிகளவில் உள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் 8 வயது சிறுவனை வெறிபிடித்த தெருநாய் ஒன்று கடித்துள்ளது. அந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவனை கடித்த நாய் வெறிபிடித்த நாய் என்பதால், சிறுவன் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால், சிறுவனின் செயல்பாடுகளும் நாயைப் போலவே மாறியுள்ளது. அதாவது, சிறுவன் நாயைப் போலவே ஊளையிடுவது, குரைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறான்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர்கள் அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் உடல்நிலை குறித்து தற்போது எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் தற்போது வரை சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. சிறுவன் நாயைப் போன்று குரைப்பதும், ஊளையிடுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்பவர்களை கண்கலங்க செய்து வருகிறது.
இந்த வெறிநாய்க்கடிக்கு ரேபிஸ் என்ற அறிவியல் பெயரும் உண்டு. பொதுவாக ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நாய் கடிப்பதால் மனிதன் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.
ரேபிஸ் வைரஸ் தாக்கிய நாய் கடிப்பதால் மனிதனின் மூளையின் மைய நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மூளை கடுமையாக பாதிக்கப்படும்போது, இறுதியில் மரணத்தை தழுவ நேரிடுகிறது. ரேபிஸ் வைரசால் தாக்கப்பட்ட நாய்கள் போன்ற விலங்குகள் மனிதர்களை கடிக்கு்போது, அதன் எச்சில் நமது ரத்தத்தில் கலப்பதால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. இதன்காரணமாக, வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு முறையாக தடுப்பூசிகளை செலுத்த சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
வாயில் எச்சில் ஒழுக, இயல்பை விட நாக்கு வெளியே தொங்குமளவிற்கு நடமாடும் நாய்களை கண்டால் அதன் அருகில் செல்லாமல் விலகிச்செல்வதுதான் பாதுகாப்பானது ஆகும். அதுபோன்று காணப்படும் நாய்கள் ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
மேலும் படிக்க: டிஜிட்டல் மயமாக்கலில் பின்தங்கி உள்ள நாடுகள் முன்னேற இந்த மென்பொருள் ஒரு வாய்ப்பு... மத்திய இணையமைச்சர் !
மேலும் படிக்க: கிறிஸ்தவ, இஸ்லாமிய தலித்துகளுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்படுமா? அந்தர் பல்டி அடித்த மத்திய அரசு..!