கிறிஸ்தவ, இஸ்லாமிய தலித்துகளுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்படுமா? அந்தர் பல்டி அடித்த மத்திய அரசு..!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடரில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியபோது, நேர்மாறான தகவலை மத்திய அரசு பகிர்ந்துள்ளது.
சீக்கியம், பௌத்தம் தவிர கால போக்கில் வேறு மதங்களுக்கு மாறிய தலித்துகளை பட்டியலினத்தில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆராய இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை அமைத்திருந்தது.
3 பேர் கொண்ட ஆணையத்தில் பேராசிரியர் சுஷ்மா யாதவ், பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலருமான ரவீந்தர்குமார் ஜெயின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நீதிபதி பாலகிருஷ்ணன் பொறுப்பேற்கும் நாளிலிருந்து இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க இரண்டு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடரில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியபோது, இதற்கு நேர்மாறான தகவலை மத்திய அரசு பகிர்ந்துள்ளது.
மதம் மாறிய தலித்துகளுக்கு பட்டியலின பலன்கள் வழங்கப்படலாமா என்பது குறித்து ஆராய விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதா? என ஒய்எஸ்ஆர்சிபி எம்பி மார்கனி பாரத் நேரடியாக கேட்ட கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் ஏ. நாராயணசுவாமி அளித்துள்ள பதிலில், "தலித் மதம் மாறியவர்களுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன் அமைக்கவில்லை
பல ஆண்டுகளாக கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பான வழக்கு 2004 முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த ஆண்டு, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த மதங்களுக்கு மாறியவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்குவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இருப்பினும், "அதன் முக்கியத்துவம், உணர்திறன் மற்றும் சாத்தியமான தாக்கத்தை கருத்தில் கொண்டு" இந்த விஷயத்தை ஆராய ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தற்போது, அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை, 1950 இந்து, சீக்கிய அல்லது பௌத்த சமூகங்களைச் சேர்ந்தவர்களை மட்டுமே பட்டியலினத்தவராக வகைப்படுத்துகிறது.
இந்த ஆணை இயற்றப்பட்டபோது, தீண்டாமை காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் சமூக குறைபாடுகள் மற்றும் பாகுபாடுகளின் அடிப்படையில் இந்து சமூகங்களை பட்டியலினத்தவராக வகைப்படுத்த அனுமதித்தது. 1956ல் சீக்கிய சமூகங்களையும், 1990ல் பௌத்த சமூகங்களை பட்டியலினத்தவராக சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.
பட்டியலினத்தவர் வேறு மதத்திற்கு மாறிய பிறகு ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவர்களை பட்டியலினத்தில் சேர்த்தால் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விசாரணை ஆணையம் ஆராயும் என மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறி இருந்தது.
அவர்களின் மரபுகள், பழக்கவழக்கங்கள், சமூக மற்றும் பிற பாகுபாடுகள், மத மாற்றத்தின் விளைவாக அவர்கள் எப்படி மாறியிருக்கிறார்கள் என்பதை ஆராய்வது இதில் அடங்கும்.