டிஜிட்டல் மயமாக்கலில் பின்தங்கி உள்ள நாடுகள் முன்னேற இந்த மென்பொருள் ஒரு வாய்ப்பு... மத்திய இணையமைச்சர் !
இந்தியா ஸ்டேக் இன்று உலகளாவிய தெற்கிற்கான வாய்ப்பைப் பிரதிபலிக்கிறது என மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்திய உலகளாவிய மன்றத்தின் இரண்டாவது பதிப்பு துபாயில் நடைபெற்றது. மன்றத்தின் இரண்டாவது நாளான நேற்று, தொழில்நுட்பத்திற்கு நிதி ஒதுக்குவது, சமூக வலைதளங்களின் எதிர்காலம், மெட்டாவர்ஸ், நிதி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து நிபுணர்கள் தங்களின் கருத்தினை பகிர்ந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், இந்திய ஸ்டேக் தொழில்நுட்பத்தின் திறன்கள் குறித்து பேசிய மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "இந்தியா ஸ்டேக் இன்று உலகளாவிய தெற்கிற்கான வாய்ப்பைப் பிரதிபலிக்கிறது.
டிஜிட்டல் மயமாக்கலில் பின்தங்கி உள்ள நாடுகள் முன்னேற இந்தியா ஸ்டாக் தொழில்நுட்பம் வாய்ப்பை வழங்குகிறது.
இதுவரை தொழில்நுட்பத் துறையில் இருந்து விலகியிருக்கும் நாடுகளுக்கு, டிஜிட்டல் மயமாக்கலின் பலன்களை தங்கள் அரசாங்கங்களுக்கும் குடிமக்களுக்கும் வழங்குவதற்கான முதல் திறனை இது வழங்கும்.
இந்தியா ஸ்டேக் இந்தியாவில் நன்கு சோதிக்கப்பட்டுள்ளது. சுற்றளவில் இருந்த மற்றும் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்த ஒவ்வொரு இந்தியரையும் நாங்கள் பிரதானப்படுத்தியுள்ளோம். இன்று ஒதுக்கப்பட்டிருப்பவர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர். இந்திய அரசாங்கத்துடன் நம் குடிமக்கள் இணைந்திருப்பதாக உணர்கிறார்கள்" என்றார்.
இந்திய - ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவு குறித்து பேசிய அவர், "ஐக்கிய அரபு அமீரகத்துடனான எல்லை இல்லா கூட்டாண்மையில் மிகப்பெரிய வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம்" என்றார்.
விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்திய தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு இடையே புது கண்டுபிடிப்புகள் மற்றும் தரவுகளுக்கான இணைப்பை உருவாக்குவோம்.
நுகர்வோர் தொழில்நுட்பம், செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் என சில துறைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து வளர்ச்சி மாடல்களை உருவாக்குவோம்" என்றார்.
இதில், ஐக்கிய அரபு அமீரகத்தின் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொலைதூர பணி பயன்பாடுகளுக்கான அமைச்சர் ஹெச்.இ. உமர் பின் சுல்தான் அல் ஒலாமாவும் கலந்து கொண்டார். டிஜிட்டல் உலகில் இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான துறைகள் குறித்து அவர் பேசினார்.
"இந்தியா ஸ்டேக் வழங்குவது, சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட வேலையை செய்ய முடியாது என்று கூறும் நாடுகளுக்கு மிக பெரிய வரப்பிரசாதம். இந்தியாவின் அளவுள்ள ஒரு நாடு, ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்திற்குள் அதிநவீனமாக செயல்படுத்த முடிந்தது. இது எவ்வளவு நம்பமுடியாதது என்று என்னால் கூற முடியாது" என ஒலாமா தெரிவித்துள்ளார்.