Uttarkhand Tunnel Collapse: உத்தரகண்ட் தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல்! உதவிக்கு வந்த ராணுவம்! சவால்களை சமாளிப்பார்களா?
உத்தரகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
Uttarkhand Tunnel Collapse: உத்தரகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கும் சுரங்கப்பாதை விபத்து:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது.
அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கு 6 இன்ச் குழாய் மூலம் உணவு, மருந்து என தேவையான பொருட்களை அனுப்பி வருகின்றனர். சாதாரண உணவுகளை சாப்பிட்டால், இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மருத்துவர்கள் பரிதுரைக்கும் உணவுகள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க ரம்மி, லூடோ, செஸ் ஆகியவை குழாய் மூலம் அனுப்பப்பட்டன. இதோடு இல்லாமல், மன அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு வாரத்திற்கு மேலாக தொடரும் மீட்பு பணி:
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் 57 மீட்டர் தூரத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதை கண்டறிந்த அதிகாரிகள் எளிதாக மீட்டுவிடலாம் என்று நினைத்தனர். ஆனால், மீட்புப் பணியில் ஒவ்வொரு நகர்வும் கடும் சவாலாக மாறியது. முதலில், ஆகர் இயந்திரத்தை கொண்டு வந்து துளையிட்டு கொண்டிருந்தனர்.
ஆனால், ஆகர் இயந்திரம் பொருத்தப்பட்ட கான்கீரிட் தளம் சேதமடைந்தது. முன்னதாக, ஆகர் இயந்திரம் துளையிடும்போது இரும்பு கம்பி குறுக்கிட்டதால் அதனை வெட்டுவதற்கு ஆறு மணி நேரம் ஆனது. சுரங்கப்பாதையில் அதிகளவு இரும்பு கம்பிகள் உள்ளதால், துளையிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகர் இயந்திரம் மூலம் 60 மீட்டர் வரை தொண்டப்பட்ட நிலையில், ஆகர் இயந்திரம் பழுதடைந்தது.
Uttarkashi (Uttarakhand) tunnel rescue | 15 metres of vertical drilling work completed.
— ANI (@ANI) November 26, 2023
As a second option, vertical drilling work was started from the hill above the tunnel.
(Visual of the vertical drilling from earlier today) pic.twitter.com/FDgg4JDhNZ
இந்நிலையில், இன்று காலை முதலே செங்குத்தாக துளையிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 15 மீட்டர் வரை தொண்டப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மீட்புக் குழுவினரும் தோண்டும் பணியில் ஈடுபடுவதற்காக ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. அதாவது, கைகளால் துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்த துளையிடுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது கூறுகையில், "தொழிலாளர்களை மீட்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பெரிய தடைகள் ஏதும் இல்லை என்றால், செங்குத்து துளையிடும் முறை மூலம் சுரங்கப்பாதையை அடைய நான்கு நாட்கள் ஆகும்'' என்றார்.