UPSC Prelims 2022: கொரோனா, புது கேள்வி முறை, வெப் 3.0- யூபிஎஸ்சி தேர்வு எப்படி இருந்தது?- தேர்வர்கள் கருத்து
யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்ற நிலையில், கேள்விகள் எப்படி இருந்தன என்பது குறித்துத் தேர்வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்ற நிலையில், கேள்விகள் எப்படி இருந்தன என்பது குறித்துத் தேர்வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.
தேர்வு முறை எப்படி?
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பவும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. முன்னதாக 2021ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் மே 30ஆம் தேதி அன்று வெளியான.
2022 தேர்வு
இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று (ஜூன் 5) இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஜி.எஸ். முதல் தாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் ஜி.எஸ். 2ஆவது தாள் எனப்படும் சிசேட் தேர்வு 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெற்றது.
யூபிஎஸ்சி தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்துத் தேர்வர்கள் சிலர் தங்களின் கருத்துகளை ’ஏபிபி நாடு’விடம் பகிர்ந்துகொண்டனர்.
செளமியா
''தேர்வில் பொருளாதாரம் சார்ந்த கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. பொருளாதாரப் பிரச்சினைகளைக் கையாள்வது குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதில் சிரமம் இருந்தது. பிரதமர் மோடி சென்ற இடங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. பிளாக்செயின், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய Web 3.0 சார்ந்து கேள்விகள் இருந்தன.மொத்தத்தில் தேர்வு கடினமாகவே இருந்தது''.
ஆறுமுகம்
''கொரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தியக் கலாச்சாரம் சார்ந்தும் ஆரோக்கிய சேது செயலி பற்றியும் கேள்விகள் இருந்தன. கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் ஆகிய கோவிட் 19-க்கு எதிரான தடுப்பூசிகள் குறித்தும் கேள்விகள் இருந்தன. 2, 3 ஆண்டுகளுக்கு முந்தைய நடப்பு நிகழ்வுகளில் இருந்தும் கேள்விகள் இருந்தன''.
மணிகண்ட வெங்கடேஷ்
''எதிர்பார்ப்பதைவிட ஒருபடி மேலே சென்று கேள்விகள் கேட்பதுதான் யூபிஎஸ்சியின் வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் இருந்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வினாத்தாள் கடினமாகவே இருந்தது. கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில் முழுமையாகத் தெரிந்தால் மட்டுமே, எழுதும் வகையில் இருந்தது. கேள்வி முறையில் இந்த முறை புதிதாக மாற்றம் கொண்டுவரப்பட்டிருந்தது.
அறிவியல், தொழில்நுட்பத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. கோயில் சம்பந்தப்பட்ட கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. 2020ஆம் ஆண்டில் வேளாண்மை பாடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. 2021-ல் விளையாட்டு மற்றும் அடிப்படை அறிவியல், தொழில்நுட்பங்களில் அதிகக் கேள்விகள் இருந்தன. இந்த முறை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகள் அதிகம் இருந்தன.
யூபிஎஸ்சி கேட்கும் நடப்பு நிகழ்வு கேள்விகள் பயிற்சி மையங்கள் கற்பிக்கும் தரத்தைவிட அதிகமாக உள்ளன. இதனால், தேர்வர்கள் தினந்தோறும் செய்தித்தாளை வாசித்து, குறிப்பு எடுத்தால் மட்டுமே சரியாக பதிலளிக்க முடியும்.
வரலாறு, பொருளாதாரம், அரசியலமைப்பு உள்ளிட்ட எளிதில் மதிப்பெண்களைப் பெறும் பாடங்களில் கேள்விகள் இந்த முறை கடினமாகவே இருந்தன. இதனால் இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என்றே எதிர்பார்க்கிறோம்''.
இவ்வாறு தேர்வர்கள் தெரிவித்தனர்.