Online Payment Limit: UPI-ல இனி ரூ.10 லட்சம் வரை அனுப்பலாம்; அவசரப்படாதீங்க, இது எல்லாருக்கும் இல்ல - விவரம் இதோ
டிஜிட்டல் இந்தியாவில் புதிய வசதியாக, யு.பி.ஐ பரிவர்த்தனையில், தினசரி பணம் அனுப்பும் உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எல்லோருக்கும் அல்ல. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

டிஜிட்டல் இந்தியாவில் இப்போது எல்லாமே ஆன்லைன் தான். சிறு வணிகர்கள் 10 ரூபாயை கூட யு.பி.ஐ-யில் பெறும் அளவிற்கு டிஜிட்டல் வணிகம் பெருகிவிட்டது. இந்நிலையில், நுகர்வோர், குறிப்பிட்ட சில பிரிவுகளில் இயங்கும் வணிகர்களுக்கு மேற்கொள்ளும் தினசரி யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை வரம்பு 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்ந்த பரிவர்த்தனை வரம்பு
தற்போதைய காலகட்டத்தில், எங்கு போனாலும், என்ன வாங்கினாலும் யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் தான் பணம் செலுத்தப்படுகிறது. அது 10 ரூபாயாக இருந்தாலும் சரி, 10 ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி, எல்லாம் யுபிஐ மயம்தான்.
இதனால், மாதம் தோறும் ஆன்லைனில் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறன்றன. இந்நிலையில், தற்போது யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
நுகர்வோர், குறிப்பிட்ட சில பிரிவுகளில் இயங்கும் வணிகர்களுக்கு மேற்கொள்ளும் தினசரி யுபிஐ பணப் பரிவர்த்தனை வரம்பு, 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தனிநபரிடம் இருந்து வணிகருக்கு செலுத்தப்படும் பி 2 எம் பரிவர்த்தனைக்கு மட்டுமே இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி 2 பி எனப்படும் தனி நபர்களுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை வரம்பு ஒரு லட்சம் ரூபாயாகவே தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு எவ்வளவு வரம்பு.?
காப்பீட்டு ப்ரீமியம், பயண முன்பதிவு, மூலதன சந்தையில் முதலீடு உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம்.
கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவதற்கான உச்ச வரம்பு 6 லட்சம் ரூபாயாகவும், கடன் மாதத் தவணைகள், சுற்றுலா, EMI உள்ளிட்டவற்றிற்கு பணம் செலுத்துவதற்கான வரம்பு 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே பரிவர்த்தனையில் 5 லட்சம் ரூபாயும், 24 மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாயும் பணம் செலுத்த முடியும்.
வங்கியில் டெபாசிட் செய்வதற்கான பரிவர்த்தனையை 5 லட்சம் ரூபாய் வரை மேற்கொள்ளலாம்.
நகைகள் வாங்குவதற்கு ஒரே நேரத்தில் 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலுத்த முடியும். 24 மணி நேரத்தில் 6 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
தனி நபர்களுக்குள் நடைபெறும் பரிவர்த்தனைக்கான வரம்பு ஒரு லட்சம் ரூபாயாகவே தொடர்கிறது.





















