காசியை போலவே தேசத்தின் கலாச்சார மையமாக திகழும் தமிழ்நாடு: உ.பி. முதலமைச்சர் யோகி புகழாரம்
தமிழ்நாடு மற்றும் காசியில் இந்திய கலாச்சாரத்தின் அனைத்து கூறுகளும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன என உத்தர பிரதேச முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் உள்ள தொடர்பை கொண்டாடும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் பதிப்பு கடந்தாண்டு நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை நடத்தப்பட்டது.
காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி:
இந்த நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பு இன்று தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி சங்கமத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "கடந்த ஓராண்டில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் தமிழ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் காசியில், இந்திய கலாச்சாரத்தின் அனைத்து கூறுகளும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன.
ஆன்மீக ரீதியாக காசி முக்கியத்துவம் வாய்ந்த தளமாக இருப்பதால் நாடு முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். இது இந்தியாவின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வின் மையமாக உள்ளது. காசியைப் போலவே, தமிழகமும் கலாச்சார மையமாக இருந்து வருகிறது.
"கலாச்சார தேசியத்தை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்"
பண்டைய காலங்களிலிருந்து அறிவு, கலை, கட்டிடக்கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் மையமாக இருந்து வருகிறது.
தமிழ் இலக்கியம் செழுமையும் தொன்மையும் கொண்டது. இந்தியாவில் சமஸ்கிருதமும் தமிழ் இலக்கியமும் மிகவும் தொன்மையானவை. அனைவரையும் உள்ளடக்கிய இலக்கியம் சமூகத்தில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் உருவாக்குகிறது. காசி தமிழ் சங்கமம் நம் நாட்டின் கலாச்சார தேசியத்தை வலுப்படுத்தும்" என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வருவதென்றால் மகாதேவனின் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு வருவதை போன்றது. அதனால்தான் தமிழ்நாடு மக்களுக்கும் காசிக்கும் ஒரு சிறந்த பந்தம் உள்ளது.
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்குள் நுழைந்ததும் 'ஒரே பாரதம் வளமான பாரதம்' என்ற உணர்வு தெரிந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. ஆதீன துறவிகளின் வழிகாட்டுதலின் கீழ், இதே செங்கோல் 1947 இல் அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக மாறியது.
உலகின் பிற நாடுகளில், தேசம் என்பது ஒரு அரசியல் வரையறையாக இருந்து வருகிறது. ஆனால், ஒரு தேசமாக இந்தியா ஆன்மீக நம்பிக்கைகளால் ஆனது. ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியார் போன்ற மகான்களால் இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் பயணங்களின் மூலம் இந்தியாவின் தேசிய உணர்வை எழுப்பினர்.
ஒரு வகையில், விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா ஒரு அளவுகோலை உருவாக்கியுள்ளது. நான் சொன்னது, செய்தது எல்லாம் நான் நினைத்தபடி நடந்ததா என்று அளவிட வேண்டும்? அது நினைத்தவர்களுக்கு நடந்ததா? விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா ஒரு பெரிய கனவு. ஒரு பெரிய தீர்மானம். இந்த தீர்மானத்தை நம் சொந்த முயற்சியால் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.