Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
திண்டிவனம் அருகே ரயில் வந்தபோது திடீரென கடுமையான அதிர்வு ஏற்படுவதை உணர்ந்த ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்று தண்டவாளத்தை பார்த்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல், அதிர்வுகள் கேட்டதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி சென்ற பயணிகள் ரயில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வந்தபோது திடீரென கடுமையான அதிர்வு ஏற்படுவதை உணர்ந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்று தண்டவாளத்தை பார்த்துள்ளார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர், இது தொடர்பான தகவலை உடனடியாக திண்டிவனம் ரயில் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ரயில்வே பொறியாளர்களும், ரயில்வே ஊழியர்களும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் அவ்வழியாக சென்ற மற்ற ரயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்பட்ட பிறகு சுமார் ஒரு மணி நேரம் கால தாமதமாக ரயில், புதுச்சேரி நோக்கி புறப்பட்டு சென்றது.
இதன் காரணமாக அவ்வழியாக செல்லவிருந்த திருச்செந்தூர் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில் உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்கள் சென்று சேர்வதில் இன்று சுமார் ஒரு மணி நேரம் காலத்தாமதம் ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை கண்டறிந்து சரியான நேரத்தில் ரயிலை நிறுத்திய ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.