"இந்துவாக இருக்க பெருமைப்படுகிறேன்" கொட்டும் மழையிலும் கோயிலை சுற்றிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்த ரிஷி சுனக், புகழ்பெற்ற அக்சர்தம் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார்.
உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். நேற்று தொடங்கி இன்று நிறைவடைந்த உச்சி மாநாட்டுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட 40க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வந்திருந்தனர்.
குறிப்பாக, பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, ரிஷி சுனக் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவென்பதால் இந்தியர்கள் மத்தியில் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனக்கின் பெற்றோர்கள், பஞ்சாபில் பிறந்தவர்கள். அதுமட்டும் இன்றி, இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தியைதான் திருமணம் செய்துள்ளார்.
கொட்டும் மழையிலும் கோயிலை சுற்றிய பிரிட்டனர் பிரதமர் ரிஷி சுனக்:
இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்த ரிஷி சுனக், புகழ்பெற்ற அக்சர்தம் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார். கோயலில் பூஜை மேற்கொண்டு அபிஷேகம் செய்த ரிஷி சுனக், அக்சதா தம்பதியினர், அங்கிருந்த அர்ச்சகர்களுடன் உரையாடினர்.
டெல்லியில் பலத்த மழைக்கு மத்தியிலும் காலை 6:30 மணிக்கு கோயிலுக்கு சென்ற அவர்களுக்கு அங்கிருந்த அர்ச்சகர்கள் கோயிலை சுற்றி காண்பித்தனர். 100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஸ்வாமிநாராயண் அக்சர்தம் கோயிலின் வரலாற்றை அவர்களுக்கு எடுத்துரைத்தனர். கோயிலுக்கு பிரிட்டன் பிரதமர் சென்றது குறித்து இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில், "இந்தியாவை பூர்வீகமாக கொள்வதிலும் இந்தியாவுடனான எனது தொடர்புகளை நினைத்தும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பெருமைமிக்க இந்துவாக இருப்பதன் அர்த்தம் என்னவென்றால் இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் எனக்கு எப்போதும் தொடர்பு இருக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிஷி சுனக் வரலாறு:
ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டங்களை பெற்ற ரிஷி, கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர், பிரிட்டன் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தபோது, கொரோனா பொருளாதார மீட்பு திட்டத்தை அறிவித்து வெகுவான பாராட்டை பெற்றார்.
பிரிட்டன் அரசியல்வாதிகளிலேயே பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் ரிஷி. கடந்த 1980ஆம் ஆண்டு, மே 12ஆம் தேதி, சவுத்தாம்ப்டனில் குடியேறிய இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர் ரிஷி சுனக். அவரது பெற்றோர் யஷ்வீர் மற்றும் உஷா, இருவரும் மருந்தாளுநர்கள் ஆவர். கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள். பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர்கள்.
முதன்முதலில் ரிச்மண்ட் (யார்க்ஸ்) தொகுதியில் இருந்து 2015 இல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 மற்றும் 2019 இல் மீண்டும் அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
பின்னர், அவர் தெரசா மே அரசாங்கத்தில் இணை அமைச்சரானார். 2019 இல், பிரிதமர் போரிஸ் ஜான்சனால் நிதியமைச்சகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2020 இல், நிதித்துறை அமைச்சரானார். கடந்த ஜூலை 2022 இல் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து ரிஷி ராஜினாமா செய்தார். இது போரிஸ் ஜான்சன் பதவி விலக காரணமாக அமைந்தது.