Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
Vetrimaaran viduthalai 2: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2 படத்தின் ட்ரெய்லர், விஜயை விமர்சிப்பதாக இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Vetrimaaran viduthalai 2: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2 படத்தின் ட்ரெய்லர், தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விடுதலை 2 ட்ரெய்லர் வெளியீடு:
வெற்றி மாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை, திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் மேனன் மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தை, உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு விடுதலை 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ நேற்று வெளியானது.
சர்ச்சையை கிளப்பிய வசனங்கள்:
டிரெய்லரில் இடம்பெற்றுள்ள இரண்டு கருத்துகள் தான் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளன. அதன்படி, ட்ரெய்லரில் ஒரு இடத்தில் ”என்ன மாதிரி படிக்காத ஒருவன் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்ததால் தான், உன்ன மாதிரி ஒருவன் படித்து விட்டு வந்து இங்கே உட்கார்ந்து இருக்கிறாய்” என நடிகர் இளவரசன் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. அதோடு, ட்ரெய்லரின் முடிவில், “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது” என்ற மற்றொரு வசனமும் இடம்பெற்றுள்ளது.
கருணாநிதிக்கான குறியீடு
ரயில்வே டிராக்கில் படுத்து போராடியவர் என்ற வசனத்தால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை தான் வெற்றிமாறன் நேரடியாக குறிப்பிட்டுள்ளார் என கூற முடிகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கல்லக்குடியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தின் போது, கருணாநிதி தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து போராடியது வரலாறு. அதனை குறிப்பிடும் விதமாகவே இளவரசு பேசும் வசனம் ட்ரெய்லரில் அமைந்துள்ளது. இதன் மூலம், ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுவதால், அவர்களை குஷிப்படுத்துவதற்காகவே கருணாநிதியை போற்றும் இந்த வசனம் படத்தில் இடம்பெற்றுள்ளதாக ஒருதரப்பு வெற்றிமாறனை சாடி வருகிறது. அதோடு, கருணாநிதியால் தான் தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி சாத்தியமானது என்பது போன்ற இந்த வசனம் ஏற்கத்தக்கது அல்ல எனவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம், ரயிலே வராத தண்டவாளத்தில் படுத்து போராடியவர் தான் கருணாநிதி என, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிற்காலத்தில் சட்டமன்றத்திலேயே விமர்சித்ததும் உண்டு.
விஜய்க்கு வெற்றிமாறன் எதிர்ப்பு?
மறுபுறம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய், அண்மையில் தான் பிரமாண்டமாக தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்தார். அதன் பிறகு விஜயின் கொள்கைகள் தெளிவாக இல்லை, குழப்பமான நிலைப்பாட்டில் இருக்கிறார் என திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள விசிக போன்ற கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த சூழலில் தான் விடுதலை 2 படத்தின் ட்ரெய்லட்ரில், “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இது விஜயை விமர்சிக்கும் விதமாகவே உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
அதேநேரம், தத்துவம் இல்லாத தலைவர் என பல ஆண்டுகளாக தேர்தலில் தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் சீமானை தான் குறிப்பிடுவதாக ஒரு தரப்பினரும், குடும்ப அரசியல் காரணமாக துணை முதலமைச்சர் பதவியை பிடித்துள்ள உதயநிதியை தான் அந்த வசனம் சாடுவதாக மற்றொரு தரப்பினரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
வெற்றிமாறன் படம் என்றாலே சமூகத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்துவது வழக்கம் தான். ஆனால், இந்தமுறை ட்ரெய்லரிலேயே தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை விடுதலை 2 படம் கிளப்பியுள்ளது.